கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கு செல்லும் இலங்கையர்கள் சம்பந்தப்பட்ட தொழில் வாய்ப்புக்காக செல்வதை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், தொழில் காப்புறுதி மற்றும் தொழிலாளர் தொடர்புகள் அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளில் தற்பொழுது தொழிலில் ஈடுபட்டுள்ள இலங்கை பணியாளர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் அந்த நாடுகளில் உள்ள தூதரகங்களுக்கு அறிவித்திருப்பதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இதுவரையில் 115 இற்கு மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அழுத்தங்களை கவனத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு உலகம் முழுவதிலும் அவசர நிலைமையை பிரகடனப்படுத்தியுள்ளது.
இலங்கையர்கள் பெரும் எண்ணிக்கையில் தொழில் வாய்ப்புக்காக செல்லும் மத்திய கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் காணப்படுகிறது. இதற்கு அமைவாக இதுவரையில் கட்டார் மற்றும் குவைத் நாடுகள் தமது நாடுகளுக்கு வரும் விமானங்களை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது.
ஏனைய நாடுகளிலும் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கை பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அந்த நாடுகளில் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் 1989 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தற்பொழுது வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்துள்ள இலங்கையர்கள் தொடர்பிலான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவது அந்த நாடுகளில் உள்ள அதிகாரிகளினால் வழங்கப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் ஆகும்.
இதேபோன்று பணியாளர்கள் இந்த நாடுகளில் தொழிலுக்காக செல்வார்களாயின் சுகாதார பிரிவின் ஆலோசனைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தொழில் வாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment