பாறுக் ஷிஹான்
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைத்துவம் உட்பட அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு துரோகங்களைச் செய்து வருகின்றனர் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கல்முனையில் திங்கட்கிழமை (9) மதியம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில், எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். நாம் கடந்த காலங்களில் பல அரசாங்கங்களைக் கொண்டு வருவதில் நாங்கள் முழுதாக பாடுபட்டவர்கள்.
ஆனால், கடந்த காலத்தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு நாம் ஆதரவு வழங்கிய போதிலும் எந்தவிதமான உதவிகளையும் சிறுபான்மை மக்களுக்கு செய்யவில்லை. எமக்கும் செய்யவில்லை. இது தவிர, கல்முனை உப பிரதேச செயலக விடயத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சம்பந்தன் ஐயா கூட எம்மை ஏமாற்றி விட்டார்.
அத்துடன், இவர்கள் வடக்கு கிழக்கு மக்களின் அபிலாசைகளையும் இதுவரை முழுமையாக ஏற்கவில்லை. எனவே, எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கான ஆதரவினை மீள்பரிசீலனைச் செய்யவுள்ளோம்.
எங்களது தொழிற்சங்கம் மற்றும் பிற அமைப்புக்கள் என்பன அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றது.இதற்கு முழுக்காரணம் தமிழ் தேசியக்கூட்டமைப்பே ஆகும். 20 வருட அரசியலில் தமிழ் மக்கள் அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மற்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாற்றப்பட வேண்டும். இவர்களை விட மக்களின் துன்பம், துயரம் என்பன எமக்கு நன்றாகத் தெரியும். அத்தோடு, 40 வருட காலமாக நாங்கள் அரச நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றோம். எனக்கருத்துத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment