திருமலையில் மரக்கறி, மீன் இறைச்சி பொருட்களை பரவலாக பகிர்ந்து விற்பனை செய்ய நடவடிக்கை! - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

திருமலையில் மரக்கறி, மீன் இறைச்சி பொருட்களை பரவலாக பகிர்ந்து விற்பனை செய்ய நடவடிக்கை!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நேரத்தில் மக்கள் பிரதான பொதுச்சந்தையிலும் மீன் சந்தையிலும் கணக்கில்லாமல் கூடுவதனை குறைக்கும் முகமாக மரக்கறி மற்றும் மீன் இறைச்சி பொருட்களை திருகோணமலையில், பரவலாக பிரதானமாக சில இடங்களில் பகிர்ந்து விற்பனை செய்வது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஆளுனரின் ஆலோசனையின் பேரில் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் நேற்று (24/3/2020) திகோணமலை கச்சேரியில் இடம்பெற்ற அவசர கூட்டத்தின் அடிப்படையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கமைய, திருகோணமலை பஸ்தரிப்பு நிலையத்திற்கருகில் உள்ள வாகனத்தரிப்பிடம், துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு முன்பதாக உள்ள பகுதி, உவர்மலை பொலிசுக்கு முன்னால் உள்ள பகுதி, மலையருவி சந்தைக்கு முன்னுள்ள பகுதி, லிங்கநகர் IOC க்கு அருகில் உள்ள நகர சபை காணி, மட்டிக்களி பகுதி, அலஸ்தோட்டம் முகாம் பகுதி, நான்காம் கட்டை சந்தி, அபேபுர சந்தி, சிறிமாபுர/ விஜிதபுர சாம்பல்தீவு பாலத்தடி, திருகோணமலை பிரதான வீதி ஆகிய பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
அரசாங்க அதிபர், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், நகர சபை மற்றும் உப்புவெளி தவிசாளர்கள், வியாபார சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

இப்பகுதிகளுக்கு வியாபாரிகளை பிரித்து அனுப்புவது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தினர் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்தனுப்புவதற்கு வியாபாரிகள் பற்றாக்குறையாக இருப்பதனால் விரும்பிய வியாபாரிகள் அல்லது வியாபாரம் செய்ய நினைப்பவர்கள் குறித்த பகுதிகளுக்கு சென்று விற்பனை நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தவிர பொதுமக்கள் இயலுமானவரை தங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்யுமாரும், மேற்குறித்த இடங்கள் தவிர்ந்து வீதியோர வியாபாரிகளுக்கு முன்னுரிமைக் கொடுத்து அவர்களிடமும் பொருட்களை கொள்வனவு செய்யும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

திருகோணமலை நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad