ஆரோக்கியமான சட்டவாக்கத்துக்காக சரியான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வோம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

ஆரோக்கியமான சட்டவாக்கத்துக்காக சரியான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வோம்

(நுஸ்கி முக்தார்) 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி, பாராளுமன்றத்தை கலைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் கடந்த 02 ஆம் திகதி வெளியானது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி 2015 செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பமான 08 வது பாராளுமன்றத்தின் ஐந்து வருட கால எல்லை இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவிருந்தது. 

எனினும் 19 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு அமைய பாராளுமன்றம் கூடி நான்கரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய 09 வது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவுசெய்யும் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கான வேட்புமனுக்களை மார்ச் மாதம் 12 ஆம் திகதியிலிருந்து 19 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை தாக்கல் செய்ய முடியும். அதன்படி புதிய பாராளுமன்றம் மே மாதம் 14 ஆம் திகதி கூடவுள்ளது. 

இந்நிலையில் பாராளுமன்றத்தில் ஆசனங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பல அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தயாராகி வருகின்றன. பல அரசியல்வாதிகளும் தமது பெயர்களை வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள முனைப்புடன் ஈடுப்பட்டு வருகின்றனர். பல்வேறு வகையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பிரச்சாரங்கள் மூலம் இதனை அறியக்கூடியதாக உள்ளது. குறிப்பாக சமூக ஊடகங்கள் மூலமான பிரச்சாரங்கள் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து நாட்டில் கற்றோர் மற்றும் ஆளுமை மிக்கவர்களை மக்கள் பிரதிநிதிகளாக அனுப்ப வேண்டுமென்ற கோசங்கள் மற்றும் கோரிக்கைகள் எழுப்பப்படுகின்ற நிலையில் கட்சிகளும் பழைய அங்கத்தவர்களை மாத்திரமல்லாமல் பல புதிய அங்கத்தவர்களையும் இணைத்துக்கொள்ள ஆலோசித்து வருகின்றன. இதனால் பல புதுமுகங்களை இம்முறை பொதுத்தேர்தல் களத்தில் காணக்கூடியதாக இருக்கும். 

இது இவ்வாறிருக்க, வாக்களர்கள் தமது நிலைப்பாடு தொடர்பில் அமைதியாகவே உள்ளனர். கடந்த காலங்களில் இடம்பெற்ற அரசியல் செயற்பாடுகள் குறித்த பொதுமக்களின் அதிருப்தி நிலைமை இதற்கு காரணமாகும். இதேவேளை தற்போதைய அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள உட்கட்சி முரண்பாட்டு நிலைமைகளும் இதற்கான காரணமாக குறிப்பிடலாம். 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பிரதான பேசுபொருளாக காணப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல், தேசிய பாதுகாப்பு, எம்.சி.சி. ஒப்பந்தம், மத்திய வங்கி பிணை முறி மோசடி போன்ற விடயங்களுடன் ஜெனீவா மனித உரிமை விவகாரம் மற்றும் வாழ்க்கைச்செலவு அதிகரித்தல் என்பனவும் இம்முறை பொதுத் தேர்தலில் முக்கிய இடம்பிடிக்கின்றமையை அவதானிக்க கூடியதாகவுள்ளது. 

அரசியல்வாதிகள் தேர்தலுகாக்க முனைப்புடன் தயாராகி வரும் அதேவேளை, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தொழில்வாண்மையாளர்கள், தொழில் சங்க செயற்பாட்டாளர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றோர் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் செயற்திட்டங்களை மேற்கொள்வதை அவதானிக்க முடிகிறது. இதில் பிரதானமாக படித்த, ஆளுமையுள்ள தகுதியான நபர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும் என்ற கோசங்கள் மேலோங்கி வருவதை காணலாம். 

தகுதியானவர்களை எவ்வாறு இனங்காண வேண்டும், அதற்கான அளவுகோல் என்ன, வேட்பாளர்களை தெரிவுசெய்யும் போது கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் என்ன என்பது தொடர்பில் சரியான தெளிவு இல்லாமல் இருக்கலாம். இதனை நிவர்த்திக்கும் வகையில் மார்ச் 12 அமைப்பு வெளியிட்டுள்ள விடயங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கது. இது தொடர்பில் அவ்வமைப்பு வெளியிட்ட பிரகடனத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பும் அனைத்து கட்சி தலைமைகளும் கைச்சாத்திட்டு அங்கீகரித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விடயங்கள் சமூக மட்டத்தில் கருத்து மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 8 அடிப்படைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் வேட்பு மனு வழங்கும் போது அரசியல்கட்சிகள் மற்றும் தலைமகள் இந்த விடயங்கள் தொடர்பில் கருத்தில்கொள்ள அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. அந்த விடயங்களாவன.

1. குற்றவாளியற்றவராக இருத்தல். 

2. இலஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடாதவராக இருத்தல். 

3. சமூகவிரோத வியாபாரங்களில் ஈடுபடாதவராக இருத்தல். 

4. சுற்றாடலைப் பேணி பாதுகாப்பவராக இருத்தல். 

5. அரசியல் அதிகாரத்தைப் துஷ்பிரயோகம் செய்யாதவராக இருத்தல். 

6. ஊழல் நிறைந்த நிதிசார் ஒப்பந்தம் மற்றும் உடன்படிக்கைகளில் ஈடுபடாதவராக இருத்தல். 

7. பிரதேசக் குடியிருப்பாளராக அல்லது மக்களுடன் தொடர்புள்ளவராக இருத்தல். 

8. வேட்புமனு வழங்கும்போது பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம். 

இவை தொடர்பில் நாட்டின் பல பாகங்களிலும் மக்களை விளிப்பூட்டி இதனை ஒரு மக்கள் மனுவாக அரசியல் கட்சி தலைவர்களுக்கு இக் காரணிகளை அங்கீகரிக்குமாறு அழுத்தம் கொடுக்கும் வகையிலான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்தக் காரணிகளை அரசியல் கட்சி தலைவர்கள் புறக்கணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இந்த பிரகடனத்தில் குற்றச்செயல்கள், துஸ்பிரயோகங்கள், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு வேட்புமனு வழங்க வேண்டாம் என்பதே பிரதான குரலாக காணப்படுகின்றது. ஆனால் இவ்வாரானவர்கள் போட்டியிடக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. ஆனாலும் அரசியல் கட்சிகள் இந்த காரணிகளுக்கு எவ்வாறு கரிசனை செலுத்தப் போகின்றது என்பது கேள்விக்குரியது. அரசியல் கட்சிகள் இவை தொடர்பில் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் சமூக மட்டத்தில் அந்தந்த நபர்கள் தொடர்பான மதிப்பீடுகள் காணப்படுகின்றன. இவற்றை வைத்து அவர்கள் தொடர்பாக வாக்காளர்களுக்கு தீர்மானம் எடுக்க முடியும். தமது வாக்குகளை பயன்படுத்துவதன் மூலம் இது போன்ற அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய சக்தி பொது மக்களிடையே காணப்படுகின்றது. ஆகவே வாக்காளர்களுக்கு அவர்கள் தெரிவு செய்யும் வேட்பாளர்களை இந்த அடிப்படைகளின் கீழ் தெரிவு செய்யலாம். இதன் மூலம் தமது வாக்குகளுக்கு பெறுமதி சேர்த்துக் கொள்ளலாம். இதேவேளை, கட்சிகளும் இது தொடர்பில் கவனம் செலுத்தி பிரதேசத்தில் சிறந்த பிரதிநிதியை அவர்கள் தெரிவு செய்வர்களேயானால் பொதுமக்களும் அந்த நபர்களுக்கு ஆதரவு வழங்கக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது. 

பெரும்பாலான அரசியல்வாதிகள் தேர்தல் காலங்கள் வந்துவிட்டால் மாத்திரமே மக்களை காணச்செல்கின்றனர். தேர்தல் நெருங்கும் போது தமது பெயர்களில் உருவாக்கப்பட்ட சங்கங்கள் ஊடாக வாரி வழங்குகின்றனர். இந்த நிதி எங்கிருந்து வந்தது என்பதை கட்சிகளோ அல்லது வேறு எந்த தரப்பினரோ கேள்விக்குட்படுத்துவதில்லை. தேர்தல் காலங்களில் பொருட்கள் பகிர்வது அல்லது மத ஸ்தானங்களுக்கு நிதி வழங்குவது சுலபமாக காணக்கூடியதாக உள்ளது. இந்த நிதி வரி செலுத்துகின்ற பொது மகளின் நிதியாகவே காணப்படுகின்றது. இவர்கள் அரசியலுக்கு வரும் போது காணப்பட்ட சொத்து விபரங்களையும் தற்போதுள்ள சொத்து விபரங்களையும் ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் அதனை அறிந்து கொள்ளலாம். அன்று அரசியல்வாதிகள் ஒய்வு பெரும் போது சாதாரண மனிதர் போன்றே ஓய்வு பெற்று சென்றனர். ஆனால் தற்போதுள்ள எத்தனை அரசியல்வாதிகளுக்கு தம்மிடமுள்ள சொத்துக்கள் பொது மக்களின் சொத்துக்கள் இல்லை என்பதை கூறமுடியும்? இது போன்ற அரசியல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வாக்காளர்கள் முன்வரவேண்டும். இதன் மூலம் தூய்மையானதொரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க முடியும். 

மக்கள் பிரதிநிதித்துவம், சட்டவாக்கம், நிதி முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வை என்பன பாராளுமன்றத்தின் நாற்பெரும் பணிகளாக குறிப்பிடமுடியும். இந்த பணிகள் சரியான முறையில் பாராளுமன்றத்தினூடாக இடம்பெறவேண்டுமானால் அவற்றை சரியாக செய்யக்கூடியவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். இதற்கான சந்தர்ப்பமாக இந்த பொதுத் தேர்தலை பயன்படுத்த வேண்டும். பொருத்தமற்றவர்களை அனுப்பிவிட்டு, பாராளுமன்றத்தின் பணிகள் போதாது என திட்டித்தீர்ப்பதில் அர்த்தமில்லை. ஒரு நோய் ஏற்பட்டால் நாம் பொருத்தமான வைத்தியரை நாடுகின்றோம். ஒரு வீடு கட்டுவதற்கு ஒரு கட்டட கலைஞரை அணுகுகின்றோம். அதேபோன்று ஒவ்வொரு துறையிலும் துறைசார்ந்த நிபுணர்களையே நடுகின்றோம். ஆனால் சட்டவாக்கம் என்று வரும் போது அதற்கு முற்றாக பொருத்மற்றவர்களையே தெரிவு செய்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும். வாக்களிக்கும் முன்னர் உங்கள் தெரிவு சரியானதா என சிந்தித்து பாருங்கள். நீங்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பாராளுமன்ற பணிகளை செய்யக்கூடிய, தகுதியானவர்களை தெரிவு செய்யுங்கள். இதன் மூலம் ஆரோக்கியமான அரசியளமைப்பொன்றுக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் பங்காளராகுவோம். 

No comments:

Post a Comment