தமிழ் மக்கள் உரிமைகளுக்காக போராடுவது இனவாதமாகாது என்பதை ஜனாதிபதி புரிந்துக்கொள்ள வேண்டும் - ஜனாதிபதிக்கு அரசியல் தெரியாவிட்டால் பிரதமர் மஹிந்தவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Friday, March 6, 2020

தமிழ் மக்கள் உரிமைகளுக்காக போராடுவது இனவாதமாகாது என்பதை ஜனாதிபதி புரிந்துக்கொள்ள வேண்டும் - ஜனாதிபதிக்கு அரசியல் தெரியாவிட்டால் பிரதமர் மஹிந்தவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்

தமிழ் மக்கள் தங்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடுவது, இனவாதமாகாது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புரிந்து கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

யாழில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், சிங்கத் தலைவர்களே இனவாதிகளாக செயற்படுகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொருளாதாரப் பிரச்சினையே அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு காரணம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தானது அரசியல் அறிவின்மையே எடுத்துக்காட்டுகின்றது.

ஜனாதிபதிக்கு அரசியல் தெரியாவிட்டால் தனது சகோதரனான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்களுக்கு இன்று வரை நீதி அதிகாரங்களும் மறுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்களுக்கு தேவையான தீர்வை வழங்குவதற்காக கடந்த ஆட்சியாளர்கள் எத்தனையோ முயற்சிகளை எடுத்துள்ளனர். குறிப்பாக சந்திரிக்கா காலத்திலும் சரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்திலும் சரி பல முயற்சிகள் எடுத்து அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வெளியில் வந்திருக்கின்றன.

இவற்றை உற்று நோக்கும்போது அரசியல் ரீதியாக பாரிய பிரச்சினை தமிழ் மக்களுக்கு உள்ளது என்பதையே வெளிக் காட்டுகின்றது. இந்த வரலாறு தெரியாத கோட்டாபய, அபிவிருத்தி ஊடாக பிரச்சினையை தீர்ப்போம் என்று பிழையான விவாதங்களை முன்னெடுத்து வருகின்றார்.

தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு வந்ததன் விளைவாகவே உரிமைப் போராட்டம் இடம்பெற்றது. அந்த உரிமை போராட்டத்தில் ஊடாக பாரிய யுத்தமொன்று உருவாகி ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. எனினும் இன்று வரை தீர்வு காணப்படவில்லை.

இராணுவத்தில் இருந்த கோட்டாபயவுக்கு அனுபவங்கள் இல்லாமல் இருக்கலாம். எனவே இவை தொடர்பில் தனது சகோதரனான மஹிந்தவிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும. ஏனெனில் மஹிந்த ஜனாதிபதியாக இருந்தபோது கூட திஸ்ஸ விதாரண உடன் இணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஆலோசிக்கப்பட்டு அறிக்கைகளும் வெளிவந்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் 18 தடவைகள் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. மேலும் வடக்கு- கிழக்கு மக்கள் தேர்தல்களில் இனவாதமாக வாக்களிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபாய தேர்தல் மேடைகளில் இனவாதியாகவே செயற்பட்டார். தனிச்சிங்கள வாக்குகளின் மூலம் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கோசங்கள் எழுப்பினார்.

தற்போது அவ்வாறு வெற்றி பெற்று, அதன் பின்னரும் கூட தான் தனிச்சிங்கள வாக்கில் தான் வந்தேன் என்றும் கூறியிருக்கிறார். எனவே வடக்கு கிழக்கில் இனவாதமாக மக்கள் செயற்படவில்லை. மாறாக தென்னிலங்கையிலிருந்து இனவாதம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காணாமல் போனவர்கள் என்று யாரும் இல்லை அவர்கள் வெளிநாடுகளில் இருக்கலாம் என்று கூறியுள்ளார். நாம் கேட்பது போரின் இறுதிப்போரில் சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் என 20 ஆயிரம் பேர் வரை காணாமல் போயுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்றே நாம் கேட்கின்றோம்.

அவ்வாறு காணாமல் போனவர்கள் கனடாவிலும் ஜெர்மனியிலும் இல்லை. உயிருடன் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று போராடிக் கொண்டிருக்கும் உறவுகள் தேடி அலைகின்றனர்.

நாட்டில் எவரும் காணாமல் போகவில்லை என்று கூறுவதாயின், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் காணாமல் போனவர்களை கண்டறிவது தொடர்பாக ஆணைக்குழு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. அதில் ஏராளமான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சாட்சியம் அளித்துள்ளனர் அவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டிருக்கின்றனர்.

நாட்டில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று கூறியுள்ளார் ஜனாதிபதி. மேலும் தேர்தலில் கோட்டாபய போட்டியிட்டபோது தாம் வெற்றி பெற்றால் அரசியல் கைதியை விடுதலை செய்வேன் என்று கூறியிருந்தார். நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்று கூறியிருந்தார்.

அப்படியாயின் என்ன அடிப்படையில் இவ்வாறான கருத்துக்களை அவர் கூறுகின்றார். தமிழ் இளைஞர்கள், தமிழ் மாணவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

கடத்தல், கொலை வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள படை உயரதிகாரிகள் நீதிமன்றங்களுக்கு செல்லாது பொது வெளிகளில் சுதந்திரமாக செல்கின்றனர். இவ்வாறான நிலைமைகள் தற்போதைய ஆட்சியில் காணப்படுகின்றது. எனினும் தமிழ் அரசியல் கைதிகளாக பலர் இன்றும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே இவற்றை உணர்ந்து ஜனாதிபதி கருத்துக்களை வெளியிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

யாழ். விஷேட நிருபர்

No comments:

Post a Comment