படையினரிடம் தங்கள் உறவுகளை ஒப்படைத்த அவர்களது சொந்தங்கள் கண்ணீரும் கம்பலையுமாக அவர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கும்போது அவர்களைப் பொய்யர்கள் என்று கூறுவதுபோல அனைவரையும் விடுவித்துவிட்டோம் என்று பிரதமர் அப்பட்டமாகப் பொய்யுரைத்துள்ளார். இதற்கு அவரின் முகவர்களாகத் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவரையும் விடுவித்துவிட்டோம் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் இது தொடர்பாக ஊடகங்களுக்கு பொ.ஐங்கரநேசன் அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும், யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியக்கோரி அவர்களது சொந்தங்கள் பல வருடங்களாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும்போது, அவர்களை ஏளனம் செய்வதுபோலப் பிரதமரின் கூற்று அமைந்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பேரினவாதத்தை மூலதனமாகக் கொண்டு மக்களின் வாக்குகள் இல்லாமலே வெற்றியைப் பெற்ற ராஜபக்ஷ சகோதரர்கள் தற்போது தமிழ் மக்களின் எந்த ஒரு கோரிக்கையையேனும் கண்டுகொள்ளாமல் இலங்கையை பௌத்த சிங்கள நாடாகக் கட்டியமைப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றனர்.
இன்னொருபுறம் அவர்களது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும், அவர்களோடு கூட்டுச் சேர்ந்திருக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்குக் கேட்டு வலம்வரத் தொடங்கியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலின் போது தென்னிலங்கையின் அரசியல் கள நிலைமைகளை அறியாது எமது தமிழ்த் தலைமைகள் எடுத்த நிலைப்பாட்டால் தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியாகப் பேரம் பேசும் சக்தியும் இல்லாமற்போனது.
ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கையை சிங்கள மக்கள் தங்களை ஒரு தனியான தேசமாகச் சிந்தித்து முடிவெடுத்தது போன்று தமிழ் மக்களும் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியோ, பகீஸ்கரித்தோ தங்களைத் தனியான ஒரு தேசமாக நிரூபித்திருக்க முடியும். எமது தலைவர்களால் தவறவிடப்பட்ட அந்த வாய்ப்பை எமது மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் சரிவரப் பயன்படுத்த வேண்டும்.
சரணடைந்தவர்கள் எல்லோரையும் விடுதலை செய்துவிட்டோம், காணாமற் போனவர்கள் என்று இங்கு எவரும் இல்லை என்று அரசாங்கம் அறிவித்த பின்பும், அதைப்பற்றி எதுவுமே பேசாமல் வாக்கு கேட்டு வரும் தெனிலங்கை கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் பேரினவாதக் கட்சிகளுக்கு முண்டுகொடுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் வாக்குகள் எதனையும் வழங்காது வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் நாங்கள் தனியான ஒரு தேசம் என்பதை முரசறைவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீரகேசரி
No comments:
Post a Comment