(செ.தேன்மொழி)
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பல்வேறு விட்டுக் கொடுப்புகளை செய்திருந்தபோதிலும். அவர்கள் தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றமையினால் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதற்கமைய வேட்பாளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியை பழிவாங்கும் நோக்கில் செயற்பட்டு வந்த தரப்பினரே தற்போது பிரிந்து சென்றுள்ளனர் என்று கூறிய அவர், இவ்வாறு கட்சி ஒழுங்கு, கட்டுப்பாட்டுக்கு புறம்பாக செயற்படும் நபர்களுக்கு இளைய தலைமுறையினர் வாக்களிக்க கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வஜிர அபேவர்தன மேலும் கூறியதாவது, பொதுத் தேர்தலில் பலமான கூட்டணியொன்றை அமைத்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தியிருந்ததுடன், இந்த விடயம் தொடர்பில் செயற்குழுவும் தீர்மானம் எடுத்திருந்தது.
அதற்கமைய பொதுக்கூட்டணியின் தலைவராக முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயர் அறிவிக்கப்பட்டதுடன், பொதுக் கூட்டணிக்கான செயலாளரை நியமித்தல், யாப்பு, வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் என்பனவும் அவருக்கே பொறுப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் எமது பொதுக் கூட்டணியை அறிவிப்பதற்காக மாநாடுவொன்றுக்கு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்குக்கு முற்பணமும் செலுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான நிலைமையிலேயே இவர்கள் பொதுக் கூட்டணி என்னும் பெயரில் தனியான கட்சியை பதிவு செய்துகொண்டு இவ்வாறு பிரிந்து சென்றுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியை பழிவாங்கும் நோக்குடன் செயற்பட்டவர்களே இன்று அதனை விட்டு பிரிந்துள்ளனர். இவர்களுள் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் உள்ளடங்குவதுடன், ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் காணப்படுகின்றனர்.
சஜித் பிரேமதாசவுக்கும், அவர் தலைமையிலான பொதுக் கூட்டணியின் செயற்பாடுகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சித் சந்தரப்பங்களை பெற்றுக் கொடுக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களுக்கு சாதகமாக செயற்குழு எவ்வளவோ விட்டுக் கொடுப்புகளை செய்தது. பொதுக் கூட்டணி தொடர்பில் செயற்குழு எடுத்த தீர்மானங்கள் ஒவ்வொன்றையும் கட்சியின் பொதுச் செயலாளர் விரைவில் தெளிவுப்படுத்துவார்.
ஐக்கிய மக்கள் சக்தி என்பது தனியான கட்சியாகும். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்புரிமை பெற்றுள்ள அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் கொண்டிருந்த உறுப்புரிமையை இழப்பதுடன், இனிவரும் காலங்களில் செல்பவர்களும் அவர்களது உறுப்புரிமைகளை இழப்பர் என அவர் இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment