மட்டு. கெம்பஸில் தங்கவைக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு பணத்தினை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 11, 2020

மட்டு. கெம்பஸில் தங்கவைக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு பணத்தினை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை இலங்கை வங்கியில் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் கந்தாக்காடு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் வெளிநாட்டுப் பணத்தினை இலங்கை ரூபாவில் மாற்றுவதற்கான நடவடிக்கை தொடர்பாக தகவலறிந்த பிரதேச இளைஞர்கள் வங்கியின் முன்பாகக்கூடி நின்று இன்று புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்செயற்பாட்டினால் வங்கி நடவடிக்கைகளில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சுறுத்தல் தொடரும் நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இத்தாலி மற்றும் தென் கொரியா நாடுகளிலிருந்து பயணிகள் அழைத்து வரப்பட்டு மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் கந்தக்காடு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தமது தேவை கருதி வங்கியில் தமது பணங்களை மாற்றுவதற்கு எடுத்த முயற்சி தொடர்பான தகவலறிந்தே இவ்வெதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வங்கியின் முன்பாகக்கூடிய இளைஞர்கள் கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

வெளிநாட்டுப் பணங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் இருக்கலாம். அவை தமது பிரதேசங்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாமென அச்சம் தெரிவித்தே தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

வாழைச்சேனை பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளைக் கேட்டறிந்து அவ்வாறான தகவல் பொய்யானதென்றும், குறித்த செயற்பாடு வங்கியில் இடம்பெறாதெனவும் தெரிவித்தனர். பொலிசாரின் வாக்குறுதியினால் போராட்டம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது.

No comments:

Post a Comment