(ஆர்.விதுஷா)
ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை எதிர்வரும் வியாழக்கிழமையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மதும பண்டார தெரிவித்தார்.
பத்தரமுல்லை எதுல் கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமையவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டதுடன், சஜித் பிரேமதாச அந்த கூட்டணியின் தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன், கூட்டணியின் பொதுச் செயலாளரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் மற்றும் வேட்பாளர் தெரிவுக் குழுவின் தலைமைப் பதவி என்பன அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாட்டில் முக்கிய பங்காளிக் கட்சிகளும் எம்முடன் இணைந்து கொண்டுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 95 வீதமாக ஐ.தே.க.வின் மாகாண சபை உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்களினதும் ஆதரவு இந்த கட்சிக்கு கிடைத்துள்ளது.
இந்த கட்சியை ஆரம்பித்து முன்னேற்றகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லும் போது எமது கட்சியை சட்டத்திற்கு முரணானது என்ற கருத்துக்களை சிலர் முன்வைக்கின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏனெனில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட சட்டபூர்வமான கட்சியாகும். அதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ளது.
ஐக்கியத்தை உறுடுதிப்படுத்தும் நோக்கிலேயே எமது சின்னம் தொடர்பில் உடனடியாக அறிவிக்காது. பொதுச் சின்னத்தில் போட்டியிட தாயாரானோம். நாம் யானை சின்னத்திற்கு எதிரானவர்கள் அல்ல. மாறாக சின்னம் தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியதால் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்தோம்.
38 இலட்சத்திற்கும் அதிகமானோர் தொலைபேசியை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், அனைவரும் அறிந்த இலகுவில் அடையாளம் காணக்கூடியதாக சின்னமாக இருப்பதனாலேயே நாம் தொலைபேசி சின்னத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னமாக தெரிவு செய்திருந்தோம் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment