(நா.தனுஜா)
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவும் நோக்கில் இலங்கை மகப்பேற்றியல் கல்லூரியின் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் 071-0301225 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இதனூடாகத் தொடர்புகொண்டு கர்ப்பிணித் தாய்மார்கள் வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இது குறித்து இலங்கை மகப்பேற்றியல் கல்லூரியின் பணிப்பாளரான மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி யு.டி.பி.ரத்னசிறியினால் விடுக்கப்பட்டிருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
நாடளாவிய ரீதியில் பரவி வரும் கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நெருக்கடியொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், நாம் பெண்களின் சுகாதார நிலை குறித்து வெகுவாக அவதானம் செலுத்தியிருக்கிறோம்.
இத்தகையதொரு சூழ்நிலையில் கர்ப்பிணித் தாய்மாரை எவ்வித மாற்றுக்கருத்துமின்றி, மிகுந்த அக்கறையுடன் பராமரிக்க வேண்டிய பொறுப்பு எமக்கிருப்பதாகக் கருதுகின்றோம்.
நாட்டின் தற்போதைய நெருக்கடியில் கர்ப்பிணித் தாய்மார்கள் தமது உடல் சுகாதார நிலை குறித்து வெகுவாகக் கவலையடைந்திருக்கிறார்கள்.
கொவிட் - 19 வைரஸ் தொற்று மற்றும் ஏனைய மகப்பேற்றுச் சிக்கல்கள் குறித்த அச்சம் அவர்களிடம் காணப்படுகின்றது.
கர்ப்பிணித் தாய்மாரின் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக அவர்களுக்கு உதவும் நோக்கில் 24 மணி நேரமும் தொடர்பை ஏற்படுத்தக் கூடிய அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
கர்ப்பிணித் தாய்மார் 071-0301225 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு தமது சந்தேகங்களை அல்லது பிரச்சினைகளை எம்மிடம் தெரிவிக்க முடியும்.
No comments:
Post a Comment