முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன உள்ளிட்ட 12 பேருக்கு பிடியாணை பிறப்பித்து, அவர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபர்களை கைது செய்வதற்கான பிடியாணையை பெறுமாறு, சட்டமா அதிபர் அவருக்கு அறிவுறுத்தியுள்ளதாக சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச வழக்கறிஞர் நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற முறிகள் ஏலம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தின் போது 51.98 பில்லியன் ரூபா முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கசுன் பாலிசேன, ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ், ரஞ்சன் ஹுலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன், அஜான் புஞ்ஜிஹேவா, புத்திக சரத்சந்திர,சங்கரப்பிள்ளை பதுமநாதன், இந்திக சமன்குமார ஆகியோர் தொடர்பிலும் பிடியாணை பெறுமாறு சட்ட மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் தொடர்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர்கள் மீது பிணை முறி கொடுக்கல் வாங்கலில் சதி செய்தமை, குற்றவியல் முறைகேடு, மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment