முஸ்லிம் பெண்களின் புர்கா தொடர்பில் நான் கூறியதாக வெளியிடப்பட்டு வரும் கருத்தை மறுக்கிறேன் - பைஸர் முஸ்தபா M.P - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 18, 2020

முஸ்லிம் பெண்களின் புர்கா தொடர்பில் நான் கூறியதாக வெளியிடப்பட்டு வரும் கருத்தை மறுக்கிறேன் - பைஸர் முஸ்தபா M.P

முஸ்லிம் பெண்களின் புர்கா தொடர்பில், தனியார் தொலைக்காட்சியொன்றில் நான் கூறிய கருத்தை, சில பேஷ்புக் நிறுவனங்கள் திரித்துக் கூறி, என்மீது மேற்கொள்ளப்பட்டு வரும் பொய்ப்பிரசார நடவடிக்கைகளை முற்று முழுதாக தான் நிராகரிப்பதாக, முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணி யும், பாராளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றில் (17) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே, பைஸர் முஸ்தபா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, சில வெப் தளங்கள், எனது கலந்துரையாடலில் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்து, அதனைத் திரிவுபடுத்தி, பேஷ்புக் மூலமாக பொய்ப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. என்மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி வருகின்றன. 

நான் அங்கு கூறாத ஒன்றைத் திரிவுபடுத்தி அவற்றை வைரலாக்கி வருகின்றன. என்மீது சேறு பூசும் நோக்கிலேயே இவ்வாறான பொய்ப்பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக நான் அறிகிறேன். இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை யாரும் நம்ப வேண்டாம் எனக்கேட்டுக் கொள்கின்றேன்.

நமது முஸ்லிம் கலாசாரம் தமிழ், சிங்களம் மற்றும் கிறிஸ்தவ கலாச்சாரத்திலிருந்து மிகவும் வேறுபட்டது. இதனால்தான் பலர் நம்மை மாறுபட்ட கண்களால் பார்க்கின்றனர். 

அரசியலை விடவும் முஸ்லிம் சமூகத்தினர் எமது மதம், எமது போதனைகள், எமது கலாசாரம் போன்றவை தொடர்பில் ஏனையோருக்கு தெளிவூட்ட வேண்டும் என நான் கருதுகிறேன். நாம் அணியும் ஆடை தொடர்பில் பெரும் அச்ச உணர்வொன்று இவ்வாறானவர்களுக்குள் இருக்கிறது. 

இப்போது, ​​நம் முஸ்லிம்களில் அநேகர் தொப்பி அணிந்து தாடி வளர்க்கிறார்கள். இது தவறல்ல. ஒரு சிலர் முஸ்லிம் பெண்களைக் கண்டால் சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார்கள். அவர்களைக் கண்டால், ஏதாவதொரு பிரச்சினையைத் தூக்கி வாரிப்போட்டு விடுவார்கள். 

முஸ்லிம் பெண்கள் தலை முடியை மறைப்பார்கள். உடல் மறைய அபாயா, ஹிஜாப் போன்ற ஆடைகளை அணிவார்கள். நாம் இவ்வாறு இருக்க, முஸ்லிம் பெண்கள் மாத்திரம் ஏன் இவ்வாறு இருக்கிறார்கள் என இவற்றை விரும்பாத சிலர் நினைக்கிறார்கள். 

இது போன்றவர்களுக்கு கட்டையாக உடை அணிந்து, உடம்பில் எந்தப் பாகத்தைக் காட்டினாலும் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை. எனவே, ஒருவருடைய சுதந்திரத்திற்கு நாம் தடையாக இருக்கக் கூடாது. ஒருவருடைய கலாசாரத்தைப் பின்பற்றுவதற்குரிய உரிமை அவருக்குண்டு என நான் நினைக்கிறேன்.

முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காக நான் எப்பொழுதும் குரல் கொடுத்து வந்துள்ளேன். அவர்களின் சுயதொழில் முயற்சிகளுக்கு கரம் கொடுத்துள்ளேன். அவர்களது வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றியுள்ளேன். 

இந்நிலையில், முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய வேண்டாம் என்றோ அல்லது புர்காவுடன் பாதையில் செல்ல வேண்டாம் என்றோ, நான் ஒருபோதும் கூறியதில்லை. அப்படிக் கூறவும் மாட்டேன். 

ஆனால், முஸ்லிம் பெண்கள் அவர்களின் பாதுகாப்பையும் நன்மையையும் கருதி, பிரதான மற்றும் சர்ச்சைக்குரிய இடங்களில் புர்கா அணிவதைத் தவிர்ந்து நடப்பது சிறந்தது என நான் நினைக்கிறேன். எமது மதக் கலாசாரத்தைப் பாதுகாப்பது, எமது உரிமையும் கடமையுமாகும் என்பதையும் நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

(ஐ.ஏ. காதிர் கான்)

No comments:

Post a Comment

Post Bottom Ad