(எம்.ஆர்.எம்.வஸீம்)
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியின் சின்னம் மற்றும் பதவிகள் விரைவில் வெளியிடுவோம் என புதிய கூட்டணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
சஜித் பிரேதமதாச தலைமையிலான புதிய கூட்டணியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர் முன்னணியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியின் நடவடிக்கைகள் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றோம்.
பொதுத் தேர்தல் நெருங்கி இருப்பதால் அதற்கான வேலைத் திட்டங்களையே ஆரம்பமாக மேற்கொள்ள இருக்கின்றோம். இது தொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாட இருக்கின்றோம்.
அத்துடன் எமது கூட்டணியின் சின்னம் மற்றும் அதன் பதவிகள் தொடர்பாக கலந்துரையாடியே தீர்மானிக்க இருக்கின்றோம். என்றாலும் மிக விரைவில் சின்னம் மற்றும் பதவிகளை அறிவிப்போம்.
அத்துடன் எமது புதிய கூட்டணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்களும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் ஜனநாயகத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள் மற்றும் கூட்டணிகளுக்கும் எமது புதிய முன்னணியில் இணைந்துகொள்ள அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment