கொரோனா வைரஸ் தொற்று பரவியதன் காரணமாக மூடப்பட்டிருந்த வூஹான் நகருக்குச் சென்று அங்குள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாது தன்னார்வத்துடன் செயற்பட்ட ஸ்ரீ லங்கன் விமான பணிக்குழாமினரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் விசேட அழைப்பின்பேரில் நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் அவர்களுக்கு விருந்துபசாரமொன்று அளிக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பத்திரகே, பணிப்பாளர் சபை மற்றும் இந்நடவடிக்கையில் ஈடுபட்ட விமானிகள், பொறியியலாளர்கள் மற்றும் பணிக்குழாமினரை ஜனாதிபதி பாராட்டினார்.
இந்நடவடிக்கையில் ஈடுபட்ட பணிக்குழாமினர் தாய் நாட்டுக்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பு நாட்டின் அனைத்து துறைக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரும் ஒரே நோக்கத்துடன் செயற்பட்டனர். அவர்களது இந்த நடவடிக்கை ஸ்ரீ லங்கன் விமான சேவையின் வரலாற்றில் இடம் பிடிக்குமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தேசிய தனித்துவத்தை பாதுகாத்து ஸ்ரீ லங்கன் விமான சேவையை முன்னெடுத்துச் செல்லவும் உலகின் முக்கிய விமான சேவைகளுக்கு நிகராக எழுந்திருக்கக்கூடிய ஒரு நிறுவனமாக ஆக்குவதற்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் வெளிவிவகாரங்களுக்கான மேலதிகச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment