மக்கள் வழங்கிய அதிகாரம் துஸ்பிரயோகம், ஏறாவூர் நகர சபையின் செயற்பாடுகள் செயலிழந்து காணப்படுகிறது : முன்னாள் அமைச்சர் சுபையிர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 12, 2020

மக்கள் வழங்கிய அதிகாரம் துஸ்பிரயோகம், ஏறாவூர் நகர சபையின் செயற்பாடுகள் செயலிழந்து காணப்படுகிறது : முன்னாள் அமைச்சர் சுபையிர்

ஏறாவூர் மக்கள் ஜனநாயக ரீதியாக வழங்கிய அதிகாரத்தினை ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் சிலர் துஸ்பிரயோகம் செய்து வருவதாகவும், இதனால் நகர சபையின் செயற்பாடுகள் செயலிழந்து காணப்படுவதாகவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூர் ஜாமிஉல் அக்பர் வட்டாரத்தில் (7) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் பிரதேச மக்கள் வழங்கிய அதிகாரத்தினை ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் துஸ்பிரயோகம் செய்து வருவது கவலையான விடயமாகும். ஏறாவூர் நகர சபை அமர்வுகளின் போது குறித்த உறுப்பினர்களின் நடவடிக்கைகள் அசிங்கமாகவுள்ளதுடன், பிரதேச அபிவிருத்திக்கும் தடையாகவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த உள்ளுர் அரசியல் தலைவர்களுக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலின் போது, ஒரே கட்சியில் அங்கம் வகித்திருந்தவர்கள் பிரிந்து நின்றே போட்டியிட்டனர். இதனால் ஒரே கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கிடையிலும், ஆதரவாலர்களுக்கிடையிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது.

அன்று உள்ளுர் அரசியல் தலைவர்களுக்குள் ஏற்பட்ட அதிகார ரீதியான முரண்பாடுகளினால் இன்று ஏறாவூர் நகர சபைக்குள்ளும் பிரச்சினைகள் ஏற்பட்ட வன்னமுள்ளது. இவ்வாறான சிறிய பிரச்சினைகளை கூட தீர்த்து வைத்து உள்ளுர் அரசியல் தலைவர்களையும், மக்களையும் ஒற்றுமைப்படுத்துகின்ற விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தவறிழைத்துள்ளது. தலைவரின் கண்மூடித்தனமான செயற்பாடுகளினால் அந்த கட்சியினுடைய உறுப்பினர்கள் இரு அணிகளாக செயற்பட்டுக்கொண்டு அதிகாரத்திற்காக முட்டி மோதிக்கொள்கின்றனர்.

இதேவேளை ஏறாவூர் நகர சபையின் கடந்த அமர்வுகளின் போதும் இரு தரப்பினருக்குமிடையில் பணிப்போர் இடம்பெற்றது. இந்த செயற்பாடுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இவ்வாறான செயற்பாடுகள் ஏறாவூர் பிரதேசத்திற்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இவற்றைப் பார்த்துக்கொண்டு உள்ளுர் அரசியல் தலைவர்களும் ஒன்றும் தெரியாதவர்களைப் போன்று மௌனமாக இருக்கின்றனர்.

இவ்வாறான உறுப்பினர்களின் தொடர்தேர்ச்சியான நடவடிக்கைகளினால் ஏறாவூர் நகர சபையினுடைய செயற்பாடுகள் செயலிழந்து காணப்படுகிறது. நகர சபை உறுப்பினர்களாக இருக்கின்ற இரு அணியினரும், இன்று பல குழுக்களாகப் பிரிந்துகொண்டு தங்களுக்கு சார்பானவர்களிடம் சத்தியக்கடதாசிகளை பெற்றுக்கொண்டு பதவிகளுக்காக அலைந்து திரிகின்றனர்.

உள்ளுராட்சி சபைகளானது சிறந்த அரசியல் தலைவர்களை உருவாக்குகின்ற ஒரு இடமாகும். அங்கு சிறந்ததொரு ஆட்சியினை நிறுவி மக்களுக்கு பணி செய்ய வேண்டியவர்கள் இன்று பதவிகளுக்காக உள்ளுராட்சி மன்றத்திற்குள்ளே மோசமான வார்த்தைகளை பேசி முட்டி மோதிக்கொள்கின்றனர். ஒரே கட்சியினர் இவ்வாறு செயற்படும் போது எவ்வாறு சிறந்த தலைவர்களை உருவாக்க முடியும்.

குறித்த கட்சியினர்களுக்குள் பிரச்சினை உச்சமடைந்துள்ள நிலையில், உள்ளுர் அரசியல் தலைவர்கள் மீண்டும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். குறித்த தலைவர்கள் தமது பதவிகளைப் பற்றி சிந்திக்கின்றனரே தவிர ஏறாவூர் நகர சபையை பற்றியும், அங்கு நடைபெறுகின்ற சம்பவங்களப் பற்றியும் கடுகளவேனும் சிந்திக்கவில்லை. இப்படியான தலைவர்களுக்கு மீண்டும் வாக்களித்து ஏறாவூர் மக்கள் எதனைச் சாதிக்கப் போகிறார்கள்.

எனவே சுயநல அரசியலுக்காக பிரிவினைகளை ஏற்படுத்தி மக்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு மாற்றமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment