கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (05) கொழும்பு மேல் நீதிமன்றினால் இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்கத் தவறியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோர் கடந்த வருடம் ஜூலை மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, ஜூலை 09ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அதன் பின்னர், குறித்த இருவருக்கும் பிணை வழங்கியமை சட்டவிரோதமானது மற்றும் நியாயமற்றது எனவும் அதனை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி கடந்த ஜூலை 18 ஆம் திகதி சட்ட மா அதிபரினால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது.
பின்னர் குறித்த இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் 09 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அன்றிலிருந்து அவர்களது விளக்கறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment