பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூலம் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதில் வழங்கவுள்ளார். பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இவ்வாறு பதில் வழங்கும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது. பாராளுமன்றம் இன்று 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அண்மையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் குழு இது தொடர்பில் தீர்மானித்தது. இதற்கமைய பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் 1.00 மணி முதல் 1.30 மணிவரை பிரதமரிடம் கேள்விகள் கேட்கும் கேள்வி நேரம் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் முன்னெடுக்கப்படும். நாளை 06 ஆம் திகதி விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள் விவாதிக்கப்படவிருப்பதுடன், பெப்ரவரி 07ஆம் திகதி மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களான நந்தா மத்தியூ, டொக்டர் ரஞ்சித் அத்தபத்து, எம்.எஸ்.தேமிஸ் மற்றும் பிரின்ஸ் குணராசா காசிநாதர் ஆகியோர் பற்றிய அனுதாபப் பிரேரணையும் இடம்பெறும்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சமன் ரத்னப்பிரிய சில்வா இன்று 5ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தனது பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி விஷேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது.
இவர் சிவில் சமூக அமைப்பு தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளராகவும் தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவராகவும் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment