பெரும்போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் செயற் திட்டத்திற்கென, மூவாயிரத்து 830 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் முதற்கட்டமாக வழங்க தீர்மானித்துள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் இந் நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு திறைசேரி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கிணங்க ஒரு கிலோ நெல்லை 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் முதன்முறையாக 25 வீத ஈரத்தன்மையுள்ள நெல்லை அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளது. கடந்த வருடங்களில் நாட்டரிசி நெல் ஒரு கிலோ 38 ரூபாவுக்கும், சம்பா நெல் ஒரு கிலோ 41 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்பட்டன.
இம்முறை அனைத்து ரக நெல்லுக்கும் ஆகக்கூடிய விலை நிர்ணயித்து, அரசாங்கம் ஒரு கிலோ நெல்லை 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்கின்றது. அரசாங்கத்திற்கு நெல்லை வழங்குவதற்காக விவசாயிகளுக்கு இரண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் மூலம் கூடுதல் ஈரத்தன்மை கொண்டதும் தரமானதுமான நெல், கிலோ 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகிறது.
மாவட்டச் செயலாளர்களின் வழிகாட்டலில் பிரதேச செயலாளர் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நெல்லைக் கொள்வனவு செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 22 வீத ஈரத்தன்மையுடைய, ஒரு கிலோ நெல் 44 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகிறது.
அதேபோன்று 14 சதவீத ஈரத்தன்மையுடைய ஒரு கிலோ நெல்லுக்கு 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகிறது. ஒரு ஏக்கரில் ஆகக்கூடிய தொகையாக ஆயிரம் கிலோ நெல் கொள்வனவு செய்யப்படுகிறது.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ஆரம்ப கட்ட நடவடிக்கைக்காக 3 ஆயிரத்து 830 மில்லியன் ரூபா வங்கி நிதியத்திலிருந்து நெல் சந்தைப்படுத்தல் சபைக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்வதற்கு திறைசேரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள களஞ்சியசாலைகளும் உணவு ஆணையாளர் திணைக்களம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் களஞ்சியசாலைகளும் அதேபோன்று சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் உரிமையாளர்களின் நெல் ஆலைகளிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டைக் கட்டியெழுப்பும் சௌபாக்கிய தொலைநோக்கிற்கு அமைய இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படுகிறது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment