பாடசாலை வளாகத்தில் போதைப்பொருள், தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் - ஒரு பாடசாலைக்கு ஒரு பொலிஸ் அதிகாரி வீதம் நியமித்து கண்காணிக்க நடவடிக்கை - மாணவர்களை போதைப் பொருளிலிருந்து மீட்க விசேட வேலைத்திட்டம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 18, 2020

பாடசாலை வளாகத்தில் போதைப்பொருள், தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் - ஒரு பாடசாலைக்கு ஒரு பொலிஸ் அதிகாரி வீதம் நியமித்து கண்காணிக்க நடவடிக்கை - மாணவர்களை போதைப் பொருளிலிருந்து மீட்க விசேட வேலைத்திட்டம்

பாடசாலை வளாகத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை போன்ற நடவடிக்கைகள் இடம் பெற்றால் அது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்திற்கு தகவல் வழங்குவதற்கு துரித தொலைபேசி இலக்கம் இன்றையதினம் (18) அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இதன்படி 0777128128 என்ற தொலைபேசி இலக்கதுடன் தொடர்புகொண்டு இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.

பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து தடுப்பதற்காக பாடசாலை சமூகத்தை நேரடியாக ஊக்குவிக்கவும், தவறான புரிந்துணர்வின் காரணமாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள மாணவர்களை அதிலிருந்து விடுவித்து அனைத்து பாடசாலைகளையும் போதைவஸ்துகளில் இருந்து விடுப்பட்ட பாதுகாப்பான சூழலாக மாற்றுவதனை நோக்காக கொண்டு கல்வி அமைச்சும், பொலிஸ் திணைக்களமும், அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு தேசிய சபையும் ஒன்றிணைந்து போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு விசேட கூட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் அதன் முதற்கட்டமாக இலங்கையில் காணப்படும் பாடசாலைகளில் அதிகளவு போதைப்பொருள் விநியோக மற்றும் பாவனை நடவடிக்கைகள் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளன.

இதன்படி மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலுள்ள 49 பாடசாலைகளை இலக்காக கொண்டு 'பாதுகாப்பான நாளைய தினம்' என்ற தொனிப்பொருளின் கீழ் விசேட வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று (18) கல்வி அமைச்சில் நடைபெற்றது.

கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்த, கல்வி மேலதிக செயலாளர் எச்.யு பிரேமதிலக, பாடசாலை சுகாதார மற்றும் போசனை துறை பணிப்பாளர் ரேனுகா பீரிஸ் ஆகியோர் கல்வி அமைச்சின் சார்பாக் கலந்து கொண்டதுடன், மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள், மேல் மாகாணத்தின் கல்வி திணைக்கள அதிகாரிகள், அதிபர்கள், டயலொக் நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பெருந்தொகையானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கருத்து தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்கள் மட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் தொடர்பாக பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம், மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்ட பாடசாலைகளில் மாத்திரம் 2,30,982 மாணவர்கள் ஹெரோயின், கஞ்சா, போதை மாத்திரை, போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் பாவனைக்கு உட்படுத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

ஏனைய மாவட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகை அதிகமாகும். எனவே குறித்த மாணவர்களை இலக்காக கொண்டு போதைப் பொருள் பாவனையில் இருந்து குறித்த மாணவர்களை பாதுகாப்பதற்காக தடுப்பூசி வழங்க வேண்டியுள்ளது.

போதைப்பொருள் பாவனையினால் பாலியல் ரீதியான பலம் அதிகரிக்கும் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும். இது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

எனவே போதைப்பொருள் பாவனை தொடர்பாக சரியான தகவல்கள் மாணவர்களுக்கு வழங்குவதுடன், மாணவர்களை நேரம் முழுவதும் கண்காணிப்பதற்கு பாடசாலை மட்டத்தில் அதிபர்களின் ஊடாக பெற்றோர், பழைய மாணவர்கள் மத்தியில் ஆர்வம் கொண்ட பிரதிநிதிகளை நியமித்து பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக பயிற்சி வழங்கவும் ஒரு பாடசாலைக்கு ஒரு பொலிஸ் அதிகாரி வீதம் நியமித்து குறித்த வேலைத்திட்டத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலை வளாகத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை போன்ற நடவடிக்கைகள் இடம் பெற்றால் அது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்திற்கு தகவல் வழங்குவதற்கு துரித தொலைபேசி இலக்கமும் இன்றைய தினம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதன்படி 0777128128 என்ற தொலைபேசி இலக்கதுடன் தொடர்பு கொண்டு இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.

இந்த துரித தொலைபேசி இலக்கத்தை டயலொக் நிறுவனத்தின் மேல் மாகாண விநியோக முகாமையாளர் மங்கள அதபத்து அவர்கள் மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோனுக்கு வழங்கி வைத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad