அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரைத் தேர்வு செய்யும் அயோவா மாநிலத்தில் நடைபெற்று முதலாவது உட்கட்சி வாக்கெடுப்பில் தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்கு முடிவுகளை வெளியிடுவது நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அந்த மாநிலத்தின் ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்த உட்கட்சி வாக்கெடுப்பில் மாநிலத்தின் 1,600 க்கும் அதிகமான பாடசாலைகள், நூலகங்கள் மற்றும் தேவாலயங்களில் ஜனநாயகக் கட்சியினர் தமது வாக்கை பதிவு செய்தனர்.
வாக்குப் பதிவு முடிவுகள் வெளியாகாத நிலையில் பல வேட்பாளர்களும் தாம் முன்னிலையில் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
வெர்மொன்ட் செனட்டரான பெர்னி சான்டர்ஸ் தாம் வெற்றி பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். உள்ளக தரவுகளை அடிப்படையாகக் கொண்டே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்டியானா, தெற்கு பென்ட்டின் முன்னாள் மேயர் பீட் பட்டிகீக்கை பின்தள்ளி முன்னிலை பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் பட்டிகீக்கும் தாம் வெற்றி பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மூன்று தொகுதி வாக்கு முடிவுகளில் குழப்பம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அயோவா ஜனநாயகக் கட்சி பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதனால் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது தவணைக்காக போட்டியிடவுள்ளார்.
ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் உட்கட்சி வாக்கெடுப்பு நாடெங்கும் நடைபெறுகிறது. இதில் கட்சியின் வேட்பாளராவதற்கு 1,991 பிரதிநிதிகளை வெல்வது அவசியமாகும்.
இதில் வெள்ளையினரை பெரும்பான்மையாகக் கொண்டதும் மக்கள் தொகைக் குறைவாக்க கொண்டதுமான அயோவாவில் 41 பிரதிநிதிகளே வழங்கப்படுகின்றனர்.
ஜனநாயக கட்சியில் ஜனாதிபதி வோட்பாளர் போட்டியில் 11 பேர் இருப்பதோடு இவர்களில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் செனட்டர் சான்டர்ஸ் முன்னணி வேட்பாளர்களாக உள்ளனர்.
நியூ ஹம்ப்செயர் மாநிலத்தில் அடுத்த வாரம் இரண்டாவது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதோடு பெப்ரவரி இறுதியில் நவாடா மற்றும் தெற்குக் கரோலினாவில் ஜனநாயகக் கட்சி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
மாநிலங்கள் அடிப்படையிலான உட்கட்சி வாக்கெடுப்புக்கு பின் வரும் ஜூலை மாதம் விஸ்கோசினில் நடைபெறும் கட்சி மாநாட்டில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
No comments:
Post a Comment