சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று ஆதாரமற்ற வதந்திகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 4, 2020

சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று ஆதாரமற்ற வதந்திகள்

நன்னடத்தை காரணமாக சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று ஆதாரமற்ற வதந்திகள் பரவி வருகின்றன. சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து 3 ஆண்டுகளாகியும் நீதிமன்றம் விதித்த ரூபா.10 கோடி அபராதத்தை சசிகலா இதுவரை செலுத்தவில்லை.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெங்களூர் தனி நீதிமன்றம் நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். 

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி குன்ஹா அளித்த சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தலா ரூபா. 10 கோடி அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி முதல் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 15 ஆம் திகதியுடன் சசிகலா சிறைக்கு வந்து 3 ஆண்டுகள் முடிவடைகிறது. 

நீதிபதி குன்ஹா சிறைத் தண்டனை விதித்தபோது சசிகலா ஏற்கனவே 21 நாட்கள் சிறையில் இருந்துள்ளார், பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து பிணையில் வந்தார்.

உச்ச நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்தவுடன் மீண்டும் சசிகலா உட்பட 3 பேரும் சிறைக்கு சென்றனர். 

இன்று வரை சசிகலா உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட ரூபா. 10 கோடி அபராதத்தை செலுத்தவில்லை. அவர் அபராதத்தை செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இது குறித்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு இதே வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பு அளித்தபோது கைதாகி 21 நாட்கள் இதே சிறையில் இருந்தார். பின்னர் பிணைணில் விடுதலையானார்.

அவர் ரூபா. 10 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பு வந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரை அவர் அபராதம் செலுத்தவில்லை. 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடியும் கடைசி நேரத்தில் கூட அவர் அபராத தொகையை செலுத்தலாம். 

கடும் அபராதம் விதிக்கப்பட்ட பெரும்பாலான குற்றவாளிகள் சிறைவாசத்தின் முடிவில் மட்டுமே பணம் செலுத்துகிறார்கள். சசிகலா வி‌ஷயத்தை பொருத்தமட்டில் அவர் காசோலை அல்லது வரைவோலை மூலம் மட்டுமே அபராதத் தொகையை செலுத்த வேண்டும்.

அந்த பணத்திற்குரிய வருமான ஆதாரத்தை அவர் தெரிவிக்க வேண்டும். வருமான வரித்துறையில் இருந்து தடையின்மை சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இந்த வேலைகள் முடிந்த பிறகுதான் அவர் அபராத தொகையை செலுத்துவார் என்று நினைக்கிறோம். அபராத தொகையை செலுத்தாவிட்டால் உச்ச நீதிமன்றம் தீர்ப்புப்படி அவர் மேலும் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டியது வரும்.

அபராதத் தொகையை செலுத்தினால் அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் விடுதலை செய்யப்படுவார். அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் அவர் விடுதலை செய்யப்படுவார். 

நன்னடத்தை காரணமாக சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று ஆதாரமற்ற வதந்திகள் வெளியில் பரவி வருகின்றன. அதுபற்றி நாங்கள் கருத்துகூற முடியாது. ஆனால் இந்த வதந்தியை பரப்புவது யார் என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

No comments:

Post a Comment