நாளாந்தம் 2 மணி நேரம் மின்வெட்டும் தீர்மானம் மின்சக்தி வலுசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலையீட்டையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டின் எப்பகுதியிலும் நேற்று மின்வெட்டு அமுல்படுத்தப்படாததோடு தொடர்ச்சியாக 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மின் சக்தி வலு சக்தி அமைச்சு தெரிவித்தது.
கெரவலபிடிய மின் உற்பத்தி நிலையத்திற்கு எரிபொருள் வழங்குவதை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இடைநிறுத்திய காரணத்தினால் மின் விநியோகம் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதனையடுத்தே மின் வெட்டு அமுல்படுத்த மின்சார சபை முடிவு செய்தது.
இந்த நிலையில் கொழும்பு தவிர்ந்த நாட்டில் அநேக பகுதிகளில் நேற்று முன்தினம் இரண்டு மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மின் சக்தி, வலு சக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர், மின்சார சபைக்கு பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தினால் வருடாந்தம் 80 பில்லியன் ரூபா கடன் எல்லைக்கு உட்பட்டதாக எரிபொருள் வழங்கப்பட்டு வந்தது.
கடன் எல்லைக்கு அப்பால் எரிபொருள் வழங்க முடியாத நிலையில் கெரவலபிடியவிற்கு எரிபொருள் வழங்குவதை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிறுத்தியதால் இந்த நெருக்கடி நிலை தோன்றியது.
இதனை ஈடு செய்வதற்காக கொழும்பு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் இரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்த மின்சார சபை முடிவு செய்து நேற்று முன்தினம் (03) மூன்று மணிநேர மின் வெட்டை அமுல்படுத்தியது.
இந்த பிரச்சினையில் தலையீடு செய்த அமைச்சர் மஹிந்த அமரவீர, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் பேச்சு நடத்தி தொடர்ச்சியாக எரிபொருள் வழங்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடன் எல்லையை அதிகரிப்பதற்கு இன்று (05) நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பில் மின் சக்தி எரி சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற ஏற்பாடாகியிருந்தது.
இதேவேளை, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வரும் நிலையில் நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டின் பின்னர் புதிதாக மின் உற்பத்தி திட்டங்கள் எதுவும் ஆரம்பிக்கப்படாத நிலையில் எதிர்காலத்தில் மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சாரத்திற்கான கேள்வி வருடாந்தம் அதிகரித்து வருவதோடு அனல் மின் நிலையங்களை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் மின் சக்தி அமைச்சு தெரிவித்தது.
ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment