(எம்.மனோசித்ரா)
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக இருப்பதால் பிரிதொரு கட்சியை ஆரம்பிப்பது தலைமைத்துவ பண்புக்கு பொறுத்தமானதாக இருக்காது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போதுள்ள நிலவரத்தை நோக்கும் போது நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி இரு குழுக்களாக பிரிந்தே போட்டியிடும் என்றும் குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று சஜித் பிரேமதாச பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட தயார் என்று சஜித் தரப்பு கூறிக் கொண்டிருக்கிறது. இதற்கு சுதந்திர கட்சி ஒருபோதும் இணங்காது என்றும் மஹிந்த அமரவீர மேலும் கூறினார்.
தலைமைத்துவம் மற்றும் சின்னம் தொடர்பான முரண்பாடுகளால் ஐக்கிய தேசிய கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் சஜித் பிரேமதாச கட்சியிலிருந்து விலகிச் சென்று புதிய கூட்டணியை உருவாக்கினால் அது தலைமைத்துவ பண்புக்கு பொறுத்தமானதல்ல.
இந்த நிலைவரத்தை அவதானிக்கும் போது பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ரணில் - சஜித் என இரு தரப்புக்களாகவே களமிறங்கும் என்று தோன்றுகிறது.
அத்தோடு சஜித் பிரேமதாச பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பயணிக்க தயாராகவுள்ளதாக சஜித் தரப்பு கூறி வருகிறது. அவ்வாறு மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க தயாராக இல்லை. அதற்கான வாய்ப்பும் ஏற்படாது எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment