இதயத்தையும் காதலர் தினத்தையும் கிண்டல் செய்வதை பார்க்க வேண்டும் - ரணிலை ஒரே தடவையில் கழுத்தைப் பிடித்து தள்ள முடியாது - News View

About Us

About Us

Breaking

Thursday, February 13, 2020

இதயத்தையும் காதலர் தினத்தையும் கிண்டல் செய்வதை பார்க்க வேண்டும் - ரணிலை ஒரே தடவையில் கழுத்தைப் பிடித்து தள்ள முடியாது

பாராளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தை தவிர்த்து வேறு சின்னத்தில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடாதென கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். யானை சின்னம் இல்லாது வேறு எந்தவொரு சின்னத்தில் போட்டியிட்டாலும் படுதோல்வியையே சந்திப்போம் எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், ரணில் விக்கிரமசிங்கவின் வயது 72. அவரும் தாம் நீண்ட காலம் அரசியலில் இருக்கப் போவதில்லையென்ற நிலைப்பாட்டில்தான் உள்ளார். அவரின் இறுதிப் பரீட்சை இதுவென்றால் அதனை எழுத அனுமதியளிக்க வேண்டும். ஒரே தடவையில் அவரை கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளுவது ஐக்கிய தேசியக் கட்சியின் சம்பிரதாயமல்ல. கட்சித் தலைவரை மாற்ற வேண்டுமென்பதற்காக கட்சியை பிளவுப்படுத்த முடியாது.

காமினி திஸாநாயக்கவின் முன்னுதாரணங்களையே நாம் இந்தத் தருணத்தில் பின்பற்ற வேண்டும்.

1994 ஆம் ஆண்டு எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்திற்கு சென்று தமக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி அவசியமென கூறினார். பின்னர் இரகசிய வாக்கெடுப்பொன்றுக்குச் சென்றுதான் அப்பதவியை பெற்றார்.

கட்சியின் தலைமைத்துவதற்கு வரவேண்டுமென்றால் அதற்கென ஒரு காலமும் நேரமும் உள்ளது. எனக்கு தலைமைத்துவப் பதவி குறித்து எவ்வித கனவுகளும் இல்லை. ஆனால், அனைவருக்கும் அந்தக் கனவு உள்ளது.

தற்போது நான் தேசிய அமைப்பாளராக பதவி வகிப்பதும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுதான். சஜித் பிரேமதாச, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் கபீர் ஹாசீம் ஆகியோர் நேற்றுமுன்தினம் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளனர். சில யோசனைகளை சமர்ப்பித்துள்ளனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மீண்டும் கூடவுள்ளது. அதன்போது இப்பிரச்சினையை சமநிலைப்படுத்த பார்க்கிறோம்.

செயற்குழுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் உயரிய அரசியல் சபையாகும். எம்.பிகள் அல்ல கட்சியின் உயர் தீர்மானங்களை எடுப்பது. எம்.பிகளிடம் நாம் வாக்கெடுப்புகளை நடத்த வேண்டிய அவசியமில்லை. செயற்குழுவின் பெரும்பான்மையானர்களின் விருப்பம் யானை சின்னத்தில் தேர்தலை சந்திப்பதாகும். இதற்கு வாக்கெடுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை.

எவரேனும் வாக்கெடுப்பை கோரினால் நடத்த முடியும். யானை சின்னத்தை தவிர்த்து வேறு எந்தவொரு சின்னத்திலும் போட்டியிட நான் தயாரில்லை. இதயம், மாம்பழம், அன்னம் என எந்தவொரு சின்னத்திலும் போட்டியிட நான் தயாரில்லை. 

இதயம் சின்னத்தையும் காதலர் தினத்தையும் வைத்து இளைஞர்கள் முகப்புத்தகத்தில் கிண்டல் செய்வதை பார்க்க வேண்டும். யானை சின்னத்தில் போட்டியிடாவிடின் இருக்கும் வாக்குகளையும் எம்மால் பெற்றுக் கொள்ள முடியாதென்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment