விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய இறுவட்டை பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவில் ஒப்படைத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (31) பிற்பகல் பாராளுமன்ற நூலகத்தில் ஒப்படைப்பதற்காக, குறித்த இறுவட்டு ஹான்சார்ட் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பாராளுமன்ற நூலகத்தில் கையளிக்கப்படும் விடயங்களை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினராலும் பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளி நபர் ஒருவர் அவற்றை அணுக வேண்டுமானால், பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் விசேட கோரிக்கை முன்வைத்து அதற்கமைய உரிய அனுமதியை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த ஜனவரி 21 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் விசேட உரையாற்றியதோடு, அதன்போது, பல்வேறு பிரபலங்களுடனான தொலைபேசி உரையாடல்களை சபையில் முன்வைப்பதாக கூறியிருந்தார்.
ஆயினும் அது தொடர்பில் எந்த உரையாடல் பதிவுகளையும் அவர் சமர்ப்பிக்கவில்லை என, சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகரும் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டதாக தெரிவித்து, ரஞ்சன் ராமநாயக்க எம்.பி. கடந்த ஜனவரி 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டதோடு, அவருக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment