பாராளுமன்றத்தை கலைக்கும் வரை பதவிக்காலம் தொடரும் - இன்று இறுதி அமர்வில்லை - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 19, 2020

பாராளுமன்றத்தை கலைக்கும் வரை பதவிக்காலம் தொடரும் - இன்று இறுதி அமர்வில்லை

பாராளுமன்றத்தின் இன்றைய (20) அமர்வு எட்டாவது பாராளுமன்றத்தின் இறுதி அமர்வில்லை எனவும், சட்ட ரீதியாக ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை எட்டாவது பாராளுமன்றச் செயற்பாடுகள் தொடருமென்றும் சபாநாயகரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார். 

இம்மாதம் 28ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் அடுத்து வரக்கூடிய ஆறு மாதங்களுக்கிடையில் ஏதோவொரு தினத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை பாராளுமன்றின் பதவிக்காலம் நீடிக்கும். 

இம்மாதத்துக்கான அமர்வு இன்று வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வருவதால், அடுத்த மாத அமர்வுக்கான திகதி அறிவிக்கப்பட்டே சபை ஒத்திவைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எட்டாவது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலேயே நிறைவடைகின்றது. அதே சமயம் பாராளுமன்றம் அதன் ஆயுட்காலத்தில் 4 ½ வருடங்களை இம்மாதம் 28ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்கிறது. 

அடுத்து வரும் ஆறு மாதகாலத்துக்குள் எந்த வேளையிலும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளது. அந்தத் தத்துவத்திற்கமைய ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கும் பிரகடனத்தை வர்த்தமானியில் அறிவித்தால், பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைந்துவிடும்.

இவ்வாறான அறிவித்தல் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியால் வெளியிடப்படாத வரை பாராளுமன்ற அமர்வுகளை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. 

இன்றைய 20ஆம் திகதிய அமர்வு இந்த மாதத்துக்கான இறுதி அமர்வாகவே கொள்ளப்படும். மார்ச் மாதத்துக்கான சபை அமர்வுக்கான திகதி வரையே சபாநாயகர் இன்றைய சபையை ஒத்திவைப்பார். 

அந்தத் திகதிக்கிடையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்கும் பிரகடனத்தை வெளியிட்டால் மாத்திரமே அதன் பதவிக்காலம் முடிவுக்குக் வந்ததாகக்கொள்ள முடியும். 

இல்லாவிடின் இன்றைய அமர்வை எட்டாவது பாராளுமன்றத்தின் இறுதி அமர்வாகக் கொள்ள முடியாது. ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை சபாநாயகர் அப்பதவியில் தொடர்வார் எனவும் அவர் தெளிவுபடுத்தினார். 

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment