(எம்.மனோசித்ரா)
இணை தலைமைத்துவ விடயம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட முக்கிய அம்சமாகும். அவ்வாறிருக்கையில் மறுத்து செயற்படுவதையோ, ஊடகங்களுக்கு ஒப்பந்தங்களை மீறிய வகையில் கருத்துக்களை வெளியிடுவதோ ஏற்புடையதல்ல என அதிருப்தியை வெளியிட்டுள்ள சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, கூட்டணி கட்சிகளின் கட்சி தலைவர்களுடனான சந்திப்பில் இந்த விடயம் குறித்து கூடிய கவனம் செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் 'ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய பங்காளி கட்சிகள் இணைந்த கூட்டணியில் இணை தலைமைத்துவம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏக தலைமைத்துவத்தில் மாத்திரமே புதிய கூட்டணி செயற்படும் என்றும் கூறியுள்ளமை குறித்து வினவிய போதே தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதித் தேர்தலைப் போன்று பொதுத் தேர்தலிலும் 'ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ' என்ற கூட்டணியிலேயே போட்டியிடவுள்ளோம். இந்த கூட்டணியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இணை தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற அம்சம் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவராகவும் உள்ளார்.
எனவே புதிய கூட்டணி அமைக்கப்பட்டதன் பின்னர் அவருக்கும் முக்கிய பதவி வழங்கப்பட வேண்டும். இதனை ஜனாதிபதித் தேர்தலின் போது பொதுஜன பெரமுனவும் ஏற்றுக் கொண்டது. ஆனால் தற்போது அதனை மறுக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தில் பேசப்பட்டவற்றை ஊடகவியலாளர் சந்திப்புக்களில் கூறுவது பொறுத்தமானதாக இருக்காது. இவ்விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்பட வேண்டும் என்று அடுத்த கட்சி தலைவர் கூட்டத்தில் வலியுறுத்துவோம் என்றார்.
No comments:
Post a Comment