‘அரசியல் தீர்வு தருவோம் என்ற உத்தரவாதம் எதனையும் முன்வைத்து புதிய ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை எனவே எவரும் அதற்கான அழுத்தங்களை பிரயோகிக்ககூடாது’ எனத் தகவல் தொடர்பாடல் அமைச்சர் தெரிவித்திருப்பது சர்வதிகாரப்போக்கை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களதும் பிரச்சினைகளையும் உணர்ந்து அவற்றுக்கான தீர்வினை ஏற்படுத்த வேண்டியது ஜனாதிபதினதும் அரசினதும் கடமையாகும்.
நாட்டில் வாழும் இனங்களின் தலைமைகள் தமது மக்களின் அபிலாசைகளை எடுத்து இயப்புவதும் அதற்கான தீர்வைக் கோரி நிற்பதும் அவர்தம் ஜனநாயகக் கடமையாகும். அந்தக் கடமையைச் செய்ய முற்படுவோரை அதிகாரப் போக்கில் தடுத்த நிறுத்த நினைப்பது ஏற்றுக் கொள்ள முடியாத அரசியல் கலாசாரம் ஆகும்.
இந்த நாட்டில் நீண்ட காலமாகச் சிறுபான்மை இனங்கள் தமக்கான அதிகார பரவாக்கல் குறித்து குரல் எழுப்பி வருகின்றன. இதற்கான தீர்வை எட்டி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவற்றின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில், அரசியல் தீர்வுகள் குறித்து எமக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என அரசின் பிரதிநிதியான அமைச்சர் தெரிவித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தாகும்.
எந்தச் சமூகமும் தனது பிரச்சினையை ஆளும் தரப்பிடமே முன்வைக்க முடியும். அதனை சரிவர அறிந்து அவற்றிக்குத் தீர்வு தர வேண்டியது ஆட்சியில் இருக்கும் அரசின் பொறுப்பாகும். அதனை விடுத்து அழுத்தம் கொடுக்கக் கூடாது கோரிக்கை வைக்கக் கூடாது எனத் தெரிவிப்பது ஆணவத்தின் வெளிப்படாகும். இதனை ஜனநாயக ரீதியாக நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
‘இந்த நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நான் ஜனாதிபதி எனவே அனைவரும் என்னுடன் இணைந்து செயற்பட முன்வாருங்கள் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவரது பதவி ஏற்பு தொடக்கம் நடந்து முடிந்த சுதந்திர தின உரை முதல் அழைப்பு விடுத்து வருகின்றார். அவரது நல் எண்ணத்தை சிறுபான்மை சமூகங்கள் பெரிதும் வரவேற்றுள்ளன.
இந்நிலையில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் குலைக்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்து வருவது பெரும் கவலையை அளிக்கிறது.
எனவே, இத்தகைய கருத்து பகிர்வுகளைத் தவிர்த்து அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு செயற்படும் எண்ணவோட்டங்களை விதைத்து இந்த நாடு ஜனநாயகத்தின் அடையாளமாக உலக அரங்கில் வலம் வர ஆவனம் செய்யவேண்டும், என்றார்.
No comments:
Post a Comment