தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வழங்க அரசாங்கம் அறிவித்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமோ, இழுத்தடிப்புக்களோ கிடையாது - News View

About Us

About Us

Breaking

Friday, February 21, 2020

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வழங்க அரசாங்கம் அறிவித்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமோ, இழுத்தடிப்புக்களோ கிடையாது

(இராஜதுரை ஹஷான்) 

பெருந்தோட்ட மலையக தொழிலாளர்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக 1000 ரூபா மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து வழங்க அரசாங்கம் அறிவித்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமோ, இழுத்தடிப்புக்களோ கிடையாது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பெருந்தோட்ட கம்பனிகளுடனான இறுதி பேச்சுவார்த்தையினை தொடர்ந்து அரசாங்கத்தின் இறுதி நிலைப்பாடு அறிவிக்கப்படும் என அரசாங்க பேச்சாளரும், அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். 

மார்ச் மாதம் 01 ஆம் திகதியில் இருந்து மலையக தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்த நிலையில், அதற்கு தோட்ட கம்பனிகள் மறுப்பு தெரிவித்துள்ளன. சம்பள விவகாரத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் வினவிய போது அரசாங்க பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மலையக மக்களுக்கு 1000 ரூபா நாளாந்த கொடுப்பனவு வழங்குவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் பெருந்தோட்டத்துறையில் தற்போது காணப்படும் நிலையினை காட்டிலும் பயனுடையதாக மாற்றியமைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது. 

இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் தேயிலை தொழிற்துறை முக்கிய பங்கு வகிக்கின்றன. மலையக மக்களுக்கு 1000 ரூபா நாளாந்த கொடுப்பனவு வழங்கும் யோசனையினை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார். இந்தயோசனைக்கு அமைச்சரவை பூரண அங்கிகாரம் வழங்கியது. 

அரசாங்கம் குறிப்பிட்டதைப் போன்று 1000 ரூபா சம்பளத்தை வழங்கினால் தோட்ட கம்பனிகள் நட்டமடைய நேரிடும் என்று தோட்ட கம்பனிகளின் உரிமையாளர்கள் அவர்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார்கள். 

தேயிலை உற்பத்தி துறையில் தற்போது நடைமுறையில் உள்ள வரிகளை குறைப்பதற்கும், சில வரிகளை முழுமையாக இரத்து செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்ததுடன், தோட்ட கம்பனிகளுக்கு ஒரு சில நிவாரனங்களையும் வழங்க தொடர்புடைய அமைச்சுக்களினுடனான பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டன. இவ்வாறான சலுகைகளை வழங்குவதாக குறிப்பிட்டும் கம்பனிகள் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. 

பெருந்தோட்ட கம்பனி உரிமையாளர்களுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை இடம் பெற்றது. தற்போதைய தொழிற்துறையினை மேலும் வலுப்படுத்த வேண்டுமாயின் அரசாங்கம் ஏதேனும் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்கள். இவர்களின் கோரிக்கையினை ஆராய்ந்து இலகு வட்டியுடனான கடன்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. 

இந்த பேச்சுவார்த்தையில் தோட்ட கம்பனிகளின் உரிமையாளர்கள் அரசாங்கத்தின் தீர்மானத்தை 80 வீதம் ஏற்றுக் கொண்டார்கள். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம் பெறவுள்ள பேச்சுவார்த்தையில் சிறந்த தீர்மானம் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment