(செ.தேன்மொழி)
தமிழ் அரசியல் கைதிகளை உயிருடன் விடுதலை செய்வதற்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி முழு முயற்சிகளையும் மேற்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இன்று வெள்ளிக்கிழமை சென்றிருந்த அவர் ஊடகங்கள் முன்னிலையில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அரசியல் கைதியாக 28 வருடங்களாக மெகசின் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் நேற்று உயிரிழந்துள்ளார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவரை விடுதலை செய்வதற்காக பல முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டிருந்த போதும் சடலமாகவே மீட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நான் பாராளுமன்றத்திற்கு தெரிவானதை அடுத்து தழில் அரசியல் கைதிகளை அடிக்கடிச் சந்தித்து வந்தேன்.
இதன்போது மகேந்திரன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. பின்னர் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்றுக் கொடுப்பதற்காக சிறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி, பாராளுமன்றத்திலும் அந்த விடயம் தொடர்பில் அறிவித்திருந்தேன். அன்றைய தினமே நீதி அமைச்சரிடமும் இது தொடர்பில் கலந்துரையாடினேன்.
1993 ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் வைத்து சந்தேகத்தின் பேரிலே மகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டகளப்பு - மொரக்கொட்டானை பகுதியைச் சேரந்த இவரது வயது கைது செய்யப்படும் போது 18 ஆகவே இருந்தபோதும் 19 வயதேகவே வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1993 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக 1994 ஆம் ஆண்டே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் தொடர்ந்தும் விசாரணைகளை இடம்பெற்று வந்ததுடன், மேன்முறையீடும் செய்யப்பட்டது. இந்நிலையிலே அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
ஆயுள் தண்டனை கைதியான இவர் 18 வயதிலே கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டதுடன், தனது உறுவினர்களின் சுகதுக்கங்களில் கூட கலந்துகொள்ள முடியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 46 ஆவது வயதிலே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தின் போது அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நீதி அமைச்சருடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்திருந்போதும், அது சாத்தியப்படவில்லை.
சந்தர்ப்பவாத அரசியலை தமிழ் அரசியல் தலைவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. கடந்த அரசாங்கம் தமிழ் அரசியல் தலைவர்களின் ஒத்துழைப்பு இன்றி ஆட்சியை முன்னெடுக்க முடியாத நிலையிலேயே இருந்தது.
அதனை கவனத்திற் கொண்டு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு அழுத்தம் தெரிவித்திருக்கலாம். அதனை அவர்கள் முன்னெடுக்க தவறிவிட்டனர்.
தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடி, இவ்வாறு சிறை வைக்கப்பட்டுள்ளவர்களில் மீண்டும் ஒருவரை சடலமாக மீட்காது, அவர்களுக்கு விடுதலை அளிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இதேவேளை மகேந்திரனின் சடலம் பிரதே பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அவரின் சடலத்தை உறவினர்களுக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment