(எம்.மனோசித்ரா)
ஐக்கிய தேசிய கட்சி பெப்ரவரி மாதத்தில் பாராளுமன்றத்தை களைப்பதற்கான யோசனையை முன்வைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுகிறது. மார்ச் மாதம் பாராளுமன்றம் களைக்கப்பட்டு ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்களின் நினைவுகள் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது அரசியலமைப்பின் படி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் பாராளுமன்றத்தை களைப்பதற்கான அதிகாரம் காணப்படுகின்றது.
அவ்வாறு மார்ச் மாதத்தில் பாராளுமன்றம் களைக்கப்பட்டால் ஏப்ரல் 27 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படலாம். ஆனால் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தியாகும்.
எனவே அந்த தினத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் நினைவில் வருவதால் அம்மக்கள் விரக்திக்குள்ளாகுவார்கள். அது ஐக்கிய தேசிய கட்சியின் அரசியலில் பாரிய தாக்கத்தை செலுத்தும் என்பதால்தான் அவர்கள் பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தைக் களைப்பதற்கான யோசனையை முன்வைக்கவுள்ளதாக தெரியவருகிறது.
எவ்வாறிருப்பினும் ஆளுந்தரப்பு என்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சியால் பெப்ரவரியில் பாராளுமன்றத்தை களைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டால் அதற்கேற்ப செயற்படுவதா அல்லது ஏற்கனவே தீர்மானித்துள்ள படி மார்ச்சில் பாராளுமன்றத்தை களைத்து ஏப்ரலில் பொதுத் தேர்தலை நடத்துவதா என்பது தொடர்பில் அனைவருடனும் பேசித் தீர்மானிக்க வேண்டும். பாராளுமன்ற குழு கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்படும் என்றார்.
No comments:
Post a Comment