புதிய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட வரிச் சலுகைகள் நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுடன் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதற்கமைய தேசத்தை கட்டியெழுப்பும் வரி முற்றாக நீக்கப்பட்டுள்ள அதேநேரம் வருமான வரி உள்ளிட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறைகளைச் சார்ந்தோருக்கான மேலும் பல வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.
இவ்வரிச் சலுகைகள் மூலம் பொதுமக்களும் வர்த்தக சமூகத்தினரும் இப்போது முதல் பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியுமென திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல நேற்று தெரிவித்தார்.
பொதுமக்களும் தொழில்வான்மையாளர்களும் மட்டுமன்றி தனியார் மற்றும் நிதி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இதன் மூலம் நன்மையடைய முடியுமென்றும் அவர் கூறினார்.
அரச மற்றும் தனியார் துறையிலுள்ள அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும் இவ்வரிச் சலுகை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வேலைதிட்டத்தை நிதியமைச்சு முன்னெடுக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இவ்வரிச் சலுகைகள் எவ்வித வன்முறைகளும் அற்ற விதத்தில் முறையாக முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதை அரசாங்கம் கண்டிப்புடன் கண்காணிக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.
வரிச் சலுகைகளுக்கான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு விளக்கமளிக்குமென்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை வருமான வரி ஒரு இலட்சத்திலிருந்து 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதென வருமானவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நதுன் குருகே தெரிவித்தார்.
இதற்கமைய மாதாந்தம் 2 இலட்சத்து 50 ஆயிரம் மற்றும் அதற்கு மேலதிகமாக வருமானம் பெறும் அரசாங்க மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்களே வருமான வரியை செலுத்த வேண்டுமென்றும் அவர் விளக்கமளித்தார்.
ஆகக்குறைந்தது 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வருமானம் பெறும் ஒருவர் 06 சதவீத வரியையும் அதிலும் ஆகக்கூடிய வருமானம் பெறுபவர்கள் பழைய நடைமுறைப்படி 18 சதவீதம் முதல் 24 சதவீத வரியை செலுத்த நேரிடும். எனினும் புதிய அரசாங்கம் இந்த ஆகக்கூடியதான 24 சதவீத வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளது.
இதுவரை அறவிடப்பட்ட 02 சதவீத தேசத்தை கட்டியெழுப்பும் வரி முற்றாக நீக்கப்பட்டுள்ளதுடன் 15 சதவீதமாக இருந்த வற் வரி 08 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளமையும் மக்களுக்கு பாரிய நன்மையை அளிக்குமென்றும் அவர் கூறினார்.
இவ்வரிக் குறைப்பு மூலம் மக்களிடையே அதிக பணப்புழக்கம் ஏற்டபடுமென்றும் அவர் நம்பிக்கையளித்தார்.
அரசாங்கம் இவ்வரிக்குறைப்பு மூலம் இழக்கும் பணத்தை அரச செலவீனங்களை குறைப்பதன் மூலம் ஈடு செய்யும்.
நேரடி வரி மூலம் இதுவரை செலவிடப்பட்ட 20 தொடக்கம் 80 சதவீதமான அரசாங்க செலவீனங்கள் 40 தொடக்கம் 60 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
லக்ஷ்மி பரசுராமன், ஜயசிறி முனசிங்க
No comments:
Post a Comment