“சட்டவிரோதமான மது விற்பனையால் பறிபோகும் அப்பாவி உயிர்கள்” - கொட்டகலையில் கவனயீர்ப்பு போராட்டமும், கண்டன பேரணியும் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2020

“சட்டவிரோதமான மது விற்பனையால் பறிபோகும் அப்பாவி உயிர்கள்” - கொட்டகலையில் கவனயீர்ப்பு போராட்டமும், கண்டன பேரணியும்

கொட்டகலை நகரில் இன்று 26.01.2020 காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றும், கண்டன பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. 

மலையகத்தில் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து “சட்டவிரோதமான மது விற்பனையால் பறிபோகும் அப்பாவி உயிர்கள்” எனும் தொனிப்பொருளில் மலையக இளைஞர், யுவதிகள் சிலரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

அதேவேளை, எதிர்ப்பு வாசகங்கள் எழுதிய பாதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு கொட்டகலை ரயில்வே கடவைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி கொட்டகலை பிரதேச சபை வரை சென்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். 
மலையகத்தில் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலையால், தமது பொருளாதாரம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் குற்றம் சுமத்தினர். 

அத்தோடு, தந்தையின் மது போதை காரணமாக கடந்த 23 ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கொட்டகலை மேபீல்ட் பிரதேச யுவதியின் இழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் மீண்டும் இது போன்ற சம்பவம் இடம்பெறாத வண்ணம் மலையகத்தில் மது ஒழிப்பு செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். 

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது மலையகத்தில் உள்ள சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைகளை ஒழிக்குமாறு கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் இதன்போது, பத்தனை பொலிஸ் நிலையம், கொட்டகலை பிரதேச சபை, மனித உரிமை ஆணைக்குழு ஆகியோருக்கு கையளிக்கப்பட்டது. 

மேலும், சட்டவிரோதமான மதுபானசாலைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுவரி திணைக்களம் மற்றும் விசேட மது ஒழிப்பு பிரிவினரிடமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment