புதிய அரசாங்கத்தின் முதலாவது முதலீட்டுத் திட்டத்திற்காக அரசாங்கம் 3 ஏக்கர் காணியை தனியாருக்கு விற்கப்போவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்த கலப்பு முதலீட்டுத் திட்டத்திற்காக 99 வருட குத்தகைக்கு காணி வழங்கப்பட்டுள்ளதோடு அரச மதிப்பீட்டுக்கமையவே காணி வழங்கப்பட்டுள்ளது என அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ஐ.தே.க தெரிவிப்பது போல இது அவர்களது ஆட்சியில் கிடைத்த வெளிநாட்டு முதலீடல்ல. 2014 இல் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் கிடைத்த முதலீடு ஆட்சி மாற்றம் காரணமாக தடைப்பட்டது. இதனை கடந்த அரசு சரிவர கையாளாததால் இந்த திட்டம் இழுத்தடிக்கப்பட்டது.
அதுவும் 200 மில்லியன் டொலர் கொண்டுவரவே முயற்சி நடந்தது. அதனை 250 மில்லியன் டொலர்களாக அதிகரித்து நாட்டுக்கு கொண்டுவந்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆட்சியில் ஒரு அங்குலம் காணி கூட தனியாருக்கு விற்கப்பட மாட்டாது.
மக்களால் நிராகரிக்கப்பட்ட எதிரணி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. எந்த ஒரு அரச நிறுவனத்தையும் எமது அரசு தனியார்மயப்படுத்தாது.
கடந்த ஆட்சியில் முதலீடுகளுக்கு உகந்த சூழல் காணப்படவில்லை. துறைமுக நகர திட்டத்தின் கிழ் உகந்த முதலீடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு முதலீடுகளை அதிகரிப்பதினூடாக தீர்வு காணப்படும்.
250 மில்லியன் கலப்பு முதலீட்டு திட்டத்தின் கீழ் 600-700 வீடமைப்பு திட்டம், தொலைத் தொடர்பு கோபுரம், என்பனவும் அடங்கும். முதலீட்டு சபை தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது என்றார்.
ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment