19ஆவது திருத்தச் சட்டத்தின் சில ஏற்பாடுகளை மாற்றும் விதத்திலும் 15 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ, சமர்ப்பித்த 21 ஆம் 22ஆம் திருத்தச்சட்ட பிரேணைகளடங்கிய இரண்டு தனிநபர் பிரேரணைகள் பாராளுமன்றத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
21ஆவது திருத்தச் சட்டப் பிரேரணை மற்றும் 22ஆவது திருத்தச் சட்டப் பிரேரணை ஆகிய இரு பிரேரணைகளே இவ்வாறு விஜேதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேற்படி 21ஆவது திருத்தச் சட்டப் பிரேரணையானது அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் சில ஏற்பாடுகளை மாற்றுமாறு முன்மொழியும் அதேநேரம் 22ஆம் திருத்தச் சட்டப் பிரேரணையானது அரசியலமைப்பின் 15ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு முன்மொழிகிறது.
19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைசசரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 40 இக்கு மேல் இருக்கக்கூடாது. ஆனால் விஜேதாச ராஜபக்ஷவின் முன்மொழிவின் பிரகாரம் பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 30 இக்கும் மேற்படக்கூடாது என்று கூறுகிறது.
மேற்படி இரு சட்டப் பிரேரணைகளும் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் வகையில் உள்ளன. 19ஆம் திருத்தச் சட்டத்தின்படி உச்ச நீதிமன்றம் மற்றும் முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரத்துடனேயே நியமிக்கப்பட வேண்டும். எனினும் மேற்படி சட்டப் பிரேரணையின்படி நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் கருத்தையடுத்து உச்ச நீதிமன்றம் மற்றும் முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்படும்.
அத்துடன் சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர், குறைகேள் அதிகாரி மற்றும் பாராளுமன்ற செயலாளர் ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு பேரவையிடமிருந்து நீக்கப்படும். மேற்கூறிய நியமனங்களை பிரதமருடன் கலந்தாலோசித்து ஜனாதிபதி மேற்கொள்ளும் அதிகாரத்தை வழங்க மேற்படி சட்டப் பிரேரணை வகை செய்கிறது.
அரசியலமைப்பு பேரவை நூறு சதவீதம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வாறான நியமனங்களின்போது அதன் அங்கீகாரத்தைப் பெறுவதில் எந்தப் பயனுமில்லை என்று விஜேதாச ராஜபக்ஷ கூறுகிறார்.
அத்துடன் மேற்படி 21ஆவது திருத்தச் சட்ட பிரேணையின்படி ஒரு குறிப்பிட்ட தொகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவதற்கான மொத்த செல்லுபடியான வாக்கு வரம்பு மட்டம் 5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று கூறுகிறது.
1978 அரசியலமைப்பில் அந்த வாக்கு வரம்பு மட்டம் 12.5 சதவீதமாக இருந்தது. எனினும் 1988 இல் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் வெண்டுகோளின் பேரில் டிசம்பர் 17ஆம் திகதிய தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த வரம்பு மட்டம் 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
இதன் காரணமாக பிரதான அரசியல் கட்சியும் கூட அதிகாரத்தை பிடிப்பதற்கு தேவையான 113 ஆசனங்களைப் பெற முடியாமலுள்ளது. எனவே பிரதான அரசியல் கடசிகளும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவைக்கோர வேண்டிய நிலை உள்ளது. இதனால் சிறுபான்மை கடசிகள் கேட்கும் வகையில் பிரதான கட்சிகள் ஆட்டம் போட வேண்டியுள்ளது. இவ்வாறு அரசாங்கம் பலமிழக்கும் போது நாட்டை வழிநடத்த முடியாதுள்ளது என்று விஜேதாச ராஜபக்ஷ விளக்கியுள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு நிறைவேற்று அதிகாரத்துக்குள்ளேயே உள்ளடக்கப்பட வேண்டும். எனவே பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதிக்கே வழங்கப்பட வேண்டும் என்று ராஜபக்ஷ கூறுகிறார்.
19ஆம் திருத்தச் சட்டம் அமுக்கு வருவதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சுப் பதவி ஜனாதிபதியிடமே இருந்தது. எனினும் 19ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி எந்தவொரு அமைச்சையும் தன் கீழ் வைத்துக்கொள்ள முடியாது.
ஜனாதிபதி ஆயுதப்படைகளின் தளபதியாவார். எனவே அவர் பாதுகா்பபு அமைச்சர் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விஜயதாச ராஜபக்ஷ மேலும் கூறினார்.
No comments:
Post a Comment