நாட்டுக்குத் தேவையான மருந்துகளை பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 120 பில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
இதேவேளை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மருந்து கொள்வனவு உட்பட சுகாதார துறையில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கிணங்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, மஹரகமையிலுள்ள அபேக்ஷா மருத்துவமனைக்கு விசேட மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொண்டார். அதன்போது அங்கு துறைசார்ந்த அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.
அபேக்ஷா மருத்துவனையின் நோயாளிகளுக்கு உரிய வகையில் உயர்தர மருந்துகளைப் பெற்றுக் கொடுப்பது, நோயாளிகளைப் பார்வையிட வருபவர்களுக்கான வசதிகளைப் பெற்றுக் கொடுப்பது, சிகிச்சைகளை முறையாகப் பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட செயற்பாடுகளில் மீளாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதற்குத் தேவையான நிதியை திறைசேரியிலிருந்து பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாம் சுகாதாரத் துறையை பொறுப்பேற்ற போது, 12 பில்லியன் ரூபா நிதியை மருந்துகளுக்காகவும் ஏனையவற்றுக்காகவும் சில நிறுவனங்களுக்கு வழங்க வேண்டியிருந்தது. அடுத்த வருடம் அரசாங்க வைத்தியசாலைகளுக்கான மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரவு செலவுத் திட்டத்திலிருந்து 120 பில்லியனை பெற்றுக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment