எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது.
கூட்டத் தொடரை வைபவ ரீதியாக ஆரம்பிக்க சகல ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அரசியலமைப்பிற்கமைய கடந்த டிசம்பர் 3ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்ற கூட்டத் தொடர் ஜனாதிபதியினால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
புதிய பாராளுமன்ற கூட்டத் தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் முற்பகல் 9 மணிக்கு விசேட அதிதிகளின் வருகையுடன் ஆரம்பமாகிறது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை முதலில் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வருகையும் இடம்பெறும். அவர்களைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தருவார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் பாராளுமன்ற பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதியை வரவேற்பர்.
ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றி வைப்பதுடன், மரியாதையின் நிமித்தம் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்படும். சபையின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதியை வரவேற்கும் வகையில் கோட்டே ஆனந்த பாலிகா வித்தியாலய மாணவியர் ஜயமங்கள கீதம் இசைப்பார்கள்.
படைக்கல சேவிதர், பிரதிப் படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதி சபைக்குள் அழைத்துச் செல்லப்படுவதுடன் பாராளுமன்ற கூட்டத் தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு தொடங்கும்.
பாராளுமன்ற கூட்டத் தொடரை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் இந்நிகழ்வில், வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் பிரதமர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர் உள்ளிட்ட 600 இற்கும் மேற்பட்ட சிறப்பு அதிதிகள் கலந்துகொள்ளவுள்ளவுள்ளனர்.
பாராளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பான ஜனாதிபதியின் பிரகடனத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் வாசித்த பின்னர் பாராளுமன்ற கூட்டத் தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை நிகழ்த்துவார். அதனை தொடர்ந்து அவர் சபை அமர்வுகளை இன்று பிற்பகல் 1.00 மணி வரை ஒத்தி வைப்பார்.
அதன் பின்னர் பாராளுமன்ற அமர்வுகள் பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். இதன்போது விவாதத்திற்கு எடுக்கப்படும் விடயம் தொடர்பில் இன்று நண்பகல் 12.30 மணிக்கு கூடும் கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மாணிக்கப்படுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்தது.
பாராளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்படுவதை யொட்டி இன்றைய தினம் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர ஆசன ஒதுக்கீட்டிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளும் தரப்பில் 8 ஆவது ஆசனம் ஜனாதிபதிக்கும் 7 ஆவது ஆசனம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிரணியில் 8 ஆவது ஆசனம் எதிர்க் கட்சித் தலைவருக்கும் 7 ஆவது ஆசனம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
த.தே.கூ மற்றும் ஜே.வி.பி என்பவற்றுக்கு எதிரணியில் முன்பு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் வழங்கபட உள்ளதோடு குமார் வெல்கம எதிரணியிலும் வன.ரதன தேரர், வசந்த சேனாநாயக்க, வியாழேந்திரன் ஆகியோருக்கு ஆளும் தரப்பில் இடம் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று ஆளும் தரப்பு மற்றும் ஐ.தே.க பாராளுமன்ற குழுக் கூட்டங்கள் நடைபெற்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் ஆளும் தரப்பு கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment