பாவனையாளர் சட்டத்தை மீறிய 1,075 பேரிடமிருந்து 44 லட்சத்து 23ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவீடு - News View

About Us

About Us

Breaking

Friday, January 3, 2020

பாவனையாளர் சட்டத்தை மீறிய 1,075 பேரிடமிருந்து 44 லட்சத்து 23ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவீடு

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவின் பணிப்புரைக்கமைய 2019ஆம் ஆண்டு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்ட 5000 இக்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டத்தை மீறிய 1075 பேருக்கெதிராக தொடரப்பட்ட வழக்குகளில் 44 லட்சத்து 23000 தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்தை மீறிய வியாபார நிலையங்களுக்கெதிராக கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில், அம்பாறை, தெஹியத்தகண்டிய ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டே இத்தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் மாவட்ட அதிகாரி என்.எம்.சப்ராஸ் தெரிவித்தார்.

இதில், காலாவதியான பொருள்களை விற்பனை செய்தல் மற்றும் காட்சிப்படுத்தல், நுகர்வோரை ஏமாற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுதல், அத்தியாவசியப் பொருள்களின் கட்டுப்பாட்டு விலையினை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல், மின்சார மற்றும் இலத்திரனியல் உபகரணங்களுக்கு கட்டுறுத்து காலம் வழங்காமை, பொருள்களை பதுக்கி வைத்தல், தரச்சான்று இல்லாத பொருள்களை விற்றல், போன்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை சட்டத்தினை மீறியவர்கள் மீதே சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 19.12.2019 அன்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாட்டரிசி மற்றும் சம்பா அரிசிக்கான உயர்ந்த பட்ச கட்டுப்பாட்டு விலை 98 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 30 வர்த்தகர்களுக்கெதிராக எதிர்வரும் வாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

அரிசியை அதிகரித்த விலைக்கு விற்பனை செய்கின்றமை குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள அதிகாரிகள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் உள்ளனர் என்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் தெரிவித்தார்.

0632222355, 0773794980 தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொண்டு முறைப்பாடுகளை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment