ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 14, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் மாறுபட்ட கருத்துகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக சிபாரிசுகளை முன்வைக்கும் குழுவின் உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, தலதா அத்துகோரள ஆகியோர் தனிப்பட்ட விதத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தமைக்கு குழுவின் ஏனைய உறுப்பினர்களான லக்ஷமன் கிரியெல்ல, வஜிர அபேவர்தன, பேராசிரியர் ஆஷு மாரசிங்க ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

மேலும் இச்செயற்பாட்டு குழுவின் பொறுப்பை மீறும் செயலெனவும், அது மறுசீரமைப்பு திட்டத்துக்கு முரணானது எனவும் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக சிபாரிசுகளை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் இரண்டு உறுப்பினர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் குழுவின் நிலைப்பாடல்ல. 

அது குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை மீறி செயற்படுவதாகவும், கட்சி மறுசீரமைப்பு பணிகளை சீர்குலைப்பதாகவுமே நாங்கள் பார்க்கின்றோம்.

அவர்கள் தமது கருத்துக்களை குழுவின் முன்னிலையிலேயே சமர்ப்பித்திருக்க வேண்டும். அதைவிடுத்து வெவ்வேறு இடங்களில் கருத்து தெரிவிப்பது உகந்ததல்ல. கட்சியின் ஒற்றுமை அதன் மேம்பாடு தொடர்பாக எமது ஒரே எதிர்பார்ப்பு தொடர்பிலேயே எமது நிலைப்பாடு அமைந்துள்ளது.

எனவே அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்களுக்கு பதிலளிப்பதற்கோ கட்சி மறுசீரமைப்பு தொடர்பாகவோ பகிரங்கமாக கருத்துத் தெரிவிப்பதற்கோ நாங்கள் முன்வரவில்லை. அது எமது நோக்கமும் அல்ல. எமது கருத்துக்களை எப்போதும் குழு முன்னிலையிலேயே சமர்ப்பிப்போம்.

எனினும் அவர்கள் வெளியே தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் மத்தியில் கட்சி மறுசீரமைப்பு தொடர்பான தவறான கருத்துக்கள் ஏற்படலாம் என்பதனால் அதனை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

கட்சித் தலைமை எமக்கு முக்கியமாக எடுத்துக் கூறியது கட்சி மறுசீரமைப்பு தொடர்பில் மிக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து முரண்பாடுகளையும் குறைத்து டிசம்பர் 20ஆம் திகதிக்குள் முடிவெடுக்குமாறும் கூறியிருந்தார். அதன் பிரகாரம் மறுசீரமைப்பு குழு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு மேலதிகமாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சஜீத் பிரேமதாசவை நியமிப்பது தொடர்பாக குழு உடன்பாடு கண்டுள்ளது.

மறுசீரமைப்புக்கு அவசியமான அனைத்து சிபாரிசுகள் தொடர்பாக கட்சி நிர்வாக சபை சிரேஷ்ட உறுப்பினர்கள் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் ஆலோசகர்கள் மற்றும் மகா சங்கத்தினர்களுடனும் மதத் தலைவர்களுடனும் கலந்துரையாடி அடுத்த வார இறுதிக்குள் இறுதி முடிவு எடுப்பதற்கு நாம் இணக்கம் கண்டிருக்கின்றோம்.

இணக்கப்பாட்டுடனும் ஒற்றுமையாகவும் முடிவெடுப்பதற்கு கொள்கை வகுக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை புறம்தள்ளி குழுவின் நிலைப்பாட்டுக்கு விரோதமாக செயற்படுவதற்கு எவருக்கும் அனுமதிக்க முடியாது.

வேறு கட்சியொன்றை உறுவாக்குவதற்கும் அதனுடாக தேர்தலுக்கு தயாராகி வருவதாக அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்து கட்சிக்கும் ஆதரவாளர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் செயற்பாடு எனவும் மறுசீரமைப்பு பணிகளை குழப்பி முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு எடுக்கும் முயற்சியாகவே நாம் கருதுகின்றோம்.

எம்.ஏ.எம்.நிலாம்

No comments:

Post a Comment