போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகுகள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபா பெறுமதியான சான்றுப் பொருள்கள் அரசுடமையாக்கப்பட்ட நிலையில் அவற்றை பகிரங்க ஏல விற்பனையில் விற்றுத் தீர்க்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் உத்தரவிட்டடார்.
மன்றின் கட்டளைப் படி சான்றுப் பொருள்களின் பகிரங்க ஏல விற்பனை எதிர்வரும் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாக முன்றலில் இடம்பெறும் என யாழ்.மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் அறிவித்தார்.
அத்துடன், இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பையும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் வெளியிட்டார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்குள் இடம்பெற்ற போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு நடவடிக்கைகளின் போது, கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் தொடர்பான வழக்குகள் நிறைவடைந்துள்ளன.
சம்பங்களின் கைது செய்யப்பட்டோருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட 4 மீன்பிடிப் படகுகள், அவற்றுக்கான 4 வெளியிணைப்பு இயந்திரங்கள், 3 மோட்டார் சைக்கிள்கள், 15 சைக்கிள்கள், எரிபொருள் நிரப்பப் பயன்படுத்தப்பட்ட வெற்று பிளாஸ்ரிக் கான்கள், ஜீ.பி.எஸ் கருவி, நங்கூரம், பைப்புகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபா பெறுமதியான சான்றுப் பொருள்களை அரசுடமையாக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
யாழ்ப்பாணம் குறூப் நிருபர்
No comments:
Post a Comment