முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பிணையில் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 4, 2019

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பிணையில் விடுதலை

ஐ.என்.எக்ஸ். ஊடக முறைகேடு தொடர்பாக அமுலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கி அவரை விடுதலை செய்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் ஊடக முறைகேடு தொடர்பாக அமுலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கில் பிணை கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்பிணை வழங்கி தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் அவருக்கு பிணை வழங்க டில்லி உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 15ஆம் திகதி மறுத்துவிட்டது. இந்நிலையில், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது. 

அந்த மனுவை விசாரித்த நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு நேற்று சிதம்பரத்துக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஓகஸ்ட் 21ஆம் திகதி கைது செய்யப்பட்டு கடந்த 106 நாட்களாக திகார் சிறையில் இருந்த நிலையில் சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

ஏற்கனவே சிபிஐ வழக்கில் பிணை கிடைத்துள்ள நிலையில் தற்போது அமுலாக்கத் துறை வழக்கிலும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

ரூபா.2 இலட்சம் ரொக்கப்பிணையிலும் இரு சரீரப் பிணைகளிலும் இவருக்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிணை வழங்கிய உச்ச நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளையும் பிறப்பித்துள்ளது.

அதன்படி, சிதம்பரம் தனது கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும். அனுமதி இல்லாமல் இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது. வழக்கு தொடர்பாக சாட்சிகளை மிரட்டவோ, கலைக்கவோ, ஆதாரங்களை அழிக்கவோ முயற்சிக்கக் கூடாது. வழக்கு தொடர்பாக சிதம்பரம் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment