தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழ​க பீடமாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2019

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழ​க பீடமாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டுள்ள 'சுபீட்சத்தின் தொலைநோக்கு' கொள்கைப் பிரகடனத்தின் கீழ் ஆசிரியர்களின் தொழிலின் தரத்தை மேம்படுத்துவதற்காக, நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக மாற்றுவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக தேசிய கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக தரம் உயர்த்தி ஆசிரியர்களுக்கு பட்டப்படிப்பு தகைமையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சர் டளஸ் அழஹப்பெருமவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இதேபோன்று இதனை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விசேட குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, கல்வியின் தரத்தையும் கட்டமைப்பையும் மாற்றுவது குறித்து அமைச்சரவை கவனம் செலுத்தியது. 'இஸட் ஸ்கோர்’ புள்ளியின் அடிப்படையில் ஒரு குழு பல்கலைக்கழகம் செல்கிறது. மற்றவர்கள் கல்வியியல் கல்லூரியில் 3 வருடங்கள் கற்று டிப்ளோமாதாரிகளாக வெளியேறுகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் கற்போர் பட்டதாரிகளாக வெளியேறுகின்றனர். ஆனால் இவர்கள் ஆசிரியத் தொழிலில் ஈடுபடுகையில் வழங்கப்படும் சம்பள அளவிலும் கல்வித் தரத்திலும் முரண்பாடு காணப்படுகிறது. இந்த நிலையிலே கல்வியியல் கல்லூரியில் 4 வருடங்கள் பயிற்சி வழங்கி பட்டதாரி ஆசியர்களாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு இக்குழு குறுகிய காலத்தில் இது தொடர்பில் அறிக்கை தயாரிக்கும். குழுவின் பரிந்துரைக்கமைய தேவையான மேலதிக முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment