புனரமைக்கப்படும் கங்குவேலி குளத்தை சேதப்படுத்தி சட்டவிரோத நீர் விநியோகம் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 1, 2019

புனரமைக்கப்படும் கங்குவேலி குளத்தை சேதப்படுத்தி சட்டவிரோத நீர் விநியோகம்

திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் புனரமைக்கப்பட்டு வரும் கங்குவேலி கிராமக் குளப்பகுதியில் அத்துமீறி வேளாண்மை செய்ய முயற்சித்ததுடன் நிர்மாணிக்கப்பட்ட குளக்கட்டுகளை பல இடங்களில் வெட்டி நீரை சட்டவிரோதமாக வெளியேற்றிய சம்பவம் தொடர்பாக மூதூர் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கங்குவேலிக் கிராமத்தின் சம்பவ இடத்திற்கு நேற்று (01) காலை பத்து மணியளவில் சென்ற பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது குளத்தில் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்கள் மற்றும் நிலமைகளை பிரதேசத்தின் விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் பொலிஸாருக்கு தெளிவுபடுத்தினர்.

குளத்தின் எட்டு இடங்களில் இவர்கள் சேதங்களை ஏற்படுத்தி நீரை சட்டவிரோதமாக வெளியேற்றியுள்ளனர். குளத்தின் நீரைத்திறக்க 2 லட்சம் ரூபா பெறுமதியான புதிய கதவையும் இவர்கள் அகற்றியுள்ளனர். 

இதனால் குளத்தின் 5 இடங்களூடாக சேமிக்கப்பட்ட நீர் வெளியேறிய வண்ணமுள்ளதாகவும் விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் பொலிசாருக்கு தெளிவு படுத்தியுள்ளனர். இவ்வாறு நீரை வௌியேற்றிய இவர்கள் இப்பகுதியில் விவசாயச் செய்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மூதூர், சேருநுவரப் பொலிஸ் நிலயங்களில் இப்பகுதியைச் சார்ந்த தமிழ், சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கங்குவேலி திருக்கரைசை விவசாய சம்மேளனம், தெகிவத்தை மகாவலி, சதுர அருன போன்ற விவசாய சம்மேளனங்கள் முறைப்பாடுகள் செய்துள்ளன. 

இச்சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் அயற்கிராமமான தெகிவத்தையைச் சார்ந்த சிலரே எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையிலும் இது குறித்து விவசாய சம்மேளனங்கள் கடிதம் மூலம் முறைப்பாடு செய்ததாக விவசாய சம்மேளன நிருவாகத்தினர் தெரிவிக்கின்றனர்

இது குறித்து உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இக்குளத்தின் புனரமைப்புப் பணிகள் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டதுடன், இப்பணிகளுக்கென 16 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் கவனத்திற்கும் விவிசாயிகள் கொண்டு வந்துள்ளனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர்)

No comments:

Post a Comment