திருகோணமலை - யான் ஓயா நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் நேற்று (04) திறக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் பிரதீப் வெலிவிட தெரிவித்தார்.
யான் ஓயா நீர்த்தேக்கத்தின் 5 கதவுகளிலும் இரண்டு, மூன்று மற்றும் நான்காவது கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு செக்கனுக்கு 960 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் பொறியியலாளர் மேலும் குறிப்பிட்டார்.
புல்மோட்டை - குச்சவெளி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருகின்றது. மாவட்டத்தில் தாழ் நிலப் பகுதியான கிண்ணியா, மூதூர், கோமரங்கடவல, பதவிசிறிபுர, குச்சவெளி போன்ற பகுதிகளில் உள்ள வயல் நிலங்கள் வெள்ள நீரினால் மூழ்கி இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (04) வரைக்கும் 237 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுனதாஸ் தெரிவித்தார்.
இதேவேளை மாவட்டத்தில் 18 குளங்களில் ஐந்து குளங்கள் நிரம்பி வழிவதாகவும், புலிகண்டிகுளம், மஹாகல்லம்பத்துவ குளம், குரங்கு பாஞ்சான் குளம் மற்றும் குச்சவெளி போன்ற குளங்கள் நிரம்பி உள்ளதாக கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் ஜீ. சுஜிதரன் தெரிவித்தார்.
கந்தளாய் குளத்துக்கு 56781 ஏக்கர் அடி தண்ணீர் வந்துள்ளதுடன் வான் எல - பேரமடுவ ஆகிய குளங்கள் நிரம்பி வழிவதும் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ .கே. அப்துல் ஜப்பார் தெரிவித்தார்.
கிண்ணியா உப்பாறு செல்லும் வீதி நீரில் மூழ்கியுள்ளதால் அங்கு படகு சேவை போடப்பட்டுள்ளதாக திருகோணமலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
(ரொட்டவெவ குறூப் நிருபர் )
No comments:
Post a Comment