கெக்கிராவ கல்வி வலயத்திலுள்ள கடான்டுகம ஜாயா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்காக "பர்தா" அணிந்து சென்ற மாணவிகள் பரீட்சை மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று (02) இடம்பெற்றது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் நேற்று சமயப் பாடத்திற்கான பரீட்சை ஆரம்பமானது. மாணவர்கள் இப்பாடங்களுக்குத் தோற்ற பரீட்சை நிலையத்திற்குச் சென்றனர்.
இந்நிலையில் இஸ்லாம் பாடத்திற்குத் தோற்றச் சென்ற இம்மாணவிகளே பர்தா அணிந்து சென்றமைக்காகத் திருப்பப்பட்டனர். பின்னர் இம்மாணவிகள் பர்தாவைக் களட்டிவிட்டு சோள்களால் தலைகளை மறைத்துச் சென்று பரீட்சைக்குத் தோற்றினர்.
இவ்வாறான செயற்பாடுகளால் மாணவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பிரணாந்து கருத்துத் தெரிவிக்கையில் சமயப் பாடத்தை எழுதுவதற்காக பரீட்சை நிலையத்திற்கு சென்ற 80 க்கும் அதிகமான முஸ்லிம் மாணவிகள் நேற்று திருப்பி அனுப்பப்பட்டனர்.
இச்செயலை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் இச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
(அநுராதபுரம் நிருபர்)
No comments:
Post a Comment