வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் மாநாடு இம்மாதம் (10) இல் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் நடைபெறவுள்ளது. பிராந்திய அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, சமூக விடயங்கள் தொடர்பில் இம்மாநட்டில் கலந்துரையாடப்படும்.
பஹ்ரைன், குவைத், ஓமான், கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய ஏழு நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பு வளைகுடா பிராந்தியத்தில் மிகப் பலம் பொருந்திய அமைப்பாகக் காணப்படுகிறது.
இந்நாடுகளிலுள்ள எண்ணெய் வளங்களே இப்பலத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது. பிற நாடுகளின் சுரண்டல்களிலிருந்து எண்ணெய் வளங்களைப் பாதுகாத்து பொருளாதாரத்தைப் பலப்படுத்தல், பொதுவான எதிரிகளை அடையாளம் கண்டு அந்நாடுகளைத் தனிமைப்படுத்தல், அரேபியர்களின் தனித்துவம், கலாசாரத்தைப் பேணல் போன்ற முக்கிய நோக்கங்களில் இவ்வமைப்பு ஒன்றித்துச் செயற்படுகிறது.
ஏற்கனவே இம்மாநாட்டை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. பின்னர் இதை சவூதியில் நடத்துவதென முடிவாகியுள்ள போதும் இதற்கான காரணங்களை, இவ்வமைப்பின் செயலாளரான அப்துல் லெத்தீப் அல்ஷியான் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
பாதுகாப்புக் காரணங்களுக்காக இது மாற்றப்பட்டிருக்கலாமெனவும் சிலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மிக ஒற்றுமையாகச் செயற்பட்ட இந்த அமைப்பு கடந்த 2017 இல் கட்டாருடன் முரண்பட்டதால் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவியது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு கட்டார் நிதியுதவியளிப்பதாகச் சந்தேகித்த இவ்வமைப்பிலுள்ள ஏனைய நாடுகள் கட்டார் மீது பொருளாதாரத் தடைகளை விதித்ததுடன் சகல தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டன. இந்தத் தடையால் வளைகுடா நாடுகளின் வர்த்தகம் பாரியளவில் பாதிக்கப்பட்டு, பாரிய ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடும் சரக்குக் கப்பல்களின் வருகைகளும் கணிசமானளவில் குறைந்திருந்தன.
பின்னர் தற்போது நடைபெறும் "அரபியன் கல்ப்" கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளை கட்டாரில் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் கட்டாருக்குச் சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதால் நிலைமைகள் சுமுகமடைந்தன.
மேலும் கடந்த ஆண்டிலும் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் மாநாடும் இராஜதந்திர முறுகல்களுக்கான எந்தத் தீர்வும் எட்டப்படாமல் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment