சஜித்தின் வெற்றியால் ஐக்கிய தேசியக் கட்சி அரச தலைமையைப் பெறும் - அவரின் வெற்றிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Monday, November 4, 2019

சஜித்தின் வெற்றியால் ஐக்கிய தேசியக் கட்சி அரச தலைமையைப் பெறும் - அவரின் வெற்றிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

1988 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்காத அரச தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாச இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கொள்வதன் ஊடாக மீள பெற்றுக்கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு குளியாபிட்டிய தேர்தல் தொகுதியில் வட்டார மட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றிபெற செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினர் அனைவரும் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்ப்பட்டு வருகின்றனர். 

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி அடைந்தால் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவைக்கான அமைச்சு பதவிகள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியில் காணப்பட்ட கருத்து முரண்பாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் அவரது வெற்றிக்காக அனைவரும் பூரண ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றனர். 

ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்னர் அடுத்த ஐந்து வருட அபிவிருத்தி நடவடிக்கைகளை வேகமாகவும் வெற்றிகரமாகவும் முன்னெடுப்பதுடன் தற்போதுள்ள சுதந்திரமான சூழலை மீளவும் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்கான வெற்றிக்காக கட்சி, பேதங்கள் பாராமல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் 47 அன்னம் சின்னத்துக்கு ஆதரவு வழங்க ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டன. 

எனினும் ராஜபக்ஷ குடும்பத்தினரை ஆட்சிக்கு கொண்டு வந்து அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு எதிரான அனைத்து முற்போக்கு சிந்தனை கொண்டவர்களும் ஒன்றிணைய வேண்டும்.

2015 ஆம் ஆண்டு எமது அரசாங்கத்தை நிறுவினாலும் எமக்கென்று ஜனாதிபதி ஒருவர் இருக்கவில்லை. அன்னம் சின்னத்தில் வெற்றி பெற்று பக்கச்சார்ப்பு இல்லாத ஜனாதிபதியாக இருப்பதாக மைத்திரிபால சிறிசேன கூறினாலும் அவர் அவ்வாறு செயற்படவில்லை. 

நாம் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து சென்றோம். எனவே கட்சி பேதங்கள் பாராமல் சஜித் பிரேமதாசவை வெற்றிபெற செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment