“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை எம்மால் ஆதரிக்க முடியாது. ஒப்பீட்டளவில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸதான் பொருத்தமானவர்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் கருத்தறியும் கூட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதன்போது சஜித் பிரேமதாஸவையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும் என்று உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் மாவை சேனாதிராஜா கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது “கோட்டாபயவை எம்மால் ஆதரிக்க முடியாது. ஒப்பீட்டளவில் சஜித் பிரேமதாஸதான் பொருத்தமானவர். நாளை (இன்று) ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அதன்பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடக்கும். அதில் முடிவெடுத்து ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாம் உத்தியோகபூர்வமாக ஒரு அறிவித்தல் விடுப்போம். அறிக்கையும் வெளியிடுவோம்” – என்றார்.
No comments:
Post a Comment