பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாடி வீட்டுத் திட்டம் மீளவும் அவலம் நிறைந்த லயத்து வாழ்க்கைக்கே மலையக மக்களை இட்டுச் செல்லும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜா தெரிவித்தார்.
கொட்டகலை ரட்ணகிரி, கிரேட்வெஸ்ட்டர்ன் வட்டாரங்களின் பிரசார கூட்டம் பிரதேச அமைப்பாளர் இரா.செந்தூரன் தலைமையில் தலவாக்கலையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்த கோரிக்கைகள் மலையகத் தமிழ் மக்களுக்கான தனியான பக்கம் ஒன்றில் உறுதிபடுத்தப்பட்டுள்ளதுடன், இப்போது முன்னெடுக்கப்பட்டுவரும் காணி உரிமையும், தனி வீட்டு உரிமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூறியதை போல மலையகத்தில் தனி வீடுகளுடன் கூடிய புதிய கிராமங்கள் பலவற்றை அமைத்துக் காட்டியுள்ளோம். சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் காணி உரிமையும், தனி வீட்டு உரிமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக கல்வி மறுமலர்ச்சிக்காக ஒரு பல்கலைக்கழகம், 10 தேசிய பாடசாலைகள், தோட்ட சுகாதார முறைமை அரச சுகாதார முறைமைக்குள் உள்வாங்குதலை துரிதமாக்கல், பொது நிர்வாக மறு சீரமைப்பு, பெருந்தோட்டத்துறை கட்டமைப்பு மாற்றம், கைத்தொழில் வலயங்கள் முதலான கோரிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
கோட்டாபய வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் சிங்களத்தில் மாத்திரமே வெளிவந்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த மாடி லயன் முறையை தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து அமைக்க உள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்களை ஏமாற்றும் வேலை மாத்திரம் அல்ல. கடந்த நான்காண்டு காலமாக தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் முன்னெடுத்துவரும் காணி உரிமையுடன் கூடிய தனி வீட்டு உரிமையை தாரை வார்க்கின்ற செயற்பாடாகும்.
காலி முகத்திடலில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவின் மாபெரும் மக்கள் கூட்டத்தில் யாரும் தமிழில் பேசவில்லை என உரிமைக் குரல் எழுப்பிய சிலர் இன்று மாடி லயம் அமைக்கப்படும் என கோட்டாபய சிங்களத்தில் கூறி இருப்பதை தமிழில் கூற வேண்டும்.
தோட்ட நிர்வாகத்தைக் கொண்டு கோட்டா அமைக்கப்போகும் மாடி லயம் எமது மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இறந்த பிணத்திற்கும் தூக்குப் போட்டு கீழே இறக்கும் வகையில் திஸ்பனையில் அமைக்கப்பட்டது போன்ற மாடி லயம் மீண்டும் வேண்டுமா? கௌரவமாக இரண்டு அறைகள், சமையலறை, கழிவறை என ஏழு பேர்ச்சஸ் காணியில் அமைந்த தனி வீடு வேண்டுமா என்பதை மலையக மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
தமது எதிர்கால சமூகத்திற்கு நிலம் இருந்தால்தான் அவர்கள் காலத்தில் இப்போது அமைக்கும் வீட்டை விஸ்தரித்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். மாடி லயம் மீளவும் அவலம் நிறைந்த லயத்து வாழ்க்கைக்கே இட்டுச் செல்லும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment