சீனாவின் டிக் டொக் செயலி மீது அடுக்கடுக்கான முறைப்பாடுகள் வெளியானதை அடுத்து, அமெரிக்க அரசு விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் இருந்து ‘டிக் டொக்’ என்னும் செயலி கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த செயலியால் சமூக வலைத்தளங்களில் தவறான வீடியோக்கள் பதிவிடப்படுவதாகவும், அதனால் பல்வேறு தீமைகள் ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த செயலியை தடை செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டிக் டொக் செயலியின் பாதுகாப்பு தன்மை குறித்து அமெரிக்க அரசு ஆய்வு செய்வதுடன், விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் அந்நிய முதலீடு தொடர்பான குழு விசாரணையை தொடங்கியுள்ளதாக பிரபல அமெரிக்க பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் டிக் டொக்கில் தணிக்கை மற்றும் தரவு சேகரிப்பு ஆகியவை கவலை அளிப்பதாக பல செனட்டர்கள் குறிப்பிட்டனர். இதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்து கருவூலத்துறை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தற்போதைய ஒழுங்குமுறை நடைமுறைகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது, ஆனால் அமெரிக்க பயனர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் டிக் டொக் செயலி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
டிக் டொக்கின் உரிமையாளர் பைட் டான்ஸ், 2017 இல் மியூசிகலி செயலியை வாங்கி டிக் டொக்குடன் இணைத்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment